Sunday, February 3, 2019

பக்கவிளைவுகள் இல்லாத... இயற்கை ஃபேஷியல்கள்...

பெண்களுக்கு அழகு என்றாலே அதில் பிரதானம் முக அழகுதான். இந்த முக அழகை பேண பெரும்பாலானோர், அட்டகாசமான விளம்பரங்களை நம்பி அதிகப்படியான பணத்தை செலவழித்து, செயற்கையான
அழகு சாதன பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர்.. இதன் விளைவு... ஆரம்பத்தில் முகம் பளபளப்பாக தெரிந்தாலும், நாளடைவில் பல்வேறு பக்க விளைவுகளை இந்த செயற்கை அழகு சாதன பொருட்கள் ஏற்படுத்துகின்றன. அப்படி என்றால் முக அழகை கூட்ட என்ன தான் வழி என்கிறீர்களா... இதற்காக தான் இயற்க்கை ஃபேஷியல்கள் இருக்கிறது. இயற்க்கை ஃபேஷியல்களை பயன்படுத்தும் போது, அது எந்தவிதமான பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துவது இல்லை...

காய்கறி ஃபேஷியல் : 

காரட், உருளைக்கிழங்கு, வெள்ளரி, தக்காளி, பூசணி இவற்றை சிறுதுண்டுகள் எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளுங்கள். இந்தக் கலவையுடன் சிறிது பயத்தமாவைக் கலந்து முகத்தில் போட்டு 15 கழித்துக் கழுவுங்கள். முகம் சோர்வு இல்லாமல் புத்துணர்ச்சியுடன் இருக்கும். 

முகத்தில் உள்ள பருக்களைப் போக்கி, மேடு பள்ளத்தைச் சரிசெய்யும். தோலுக்கு அதிக ஊட்டச் சத்தையும் நிறத்தையும் கொடுக்கிறது இந்த ஃபேஷியல்.

பழங்கள் ஃபேஷியல் : 


வாழைப்பழ ஃபேஷியல்

செய்முறை : வாழைப்பழத்தை நன்கு மசித்து, அத்துடன் தயிர் மற்றும் சிறிது தேன் சேர்த்து கலந்து, முகத்திற்கு ஃபேஷியல் செய்ய வேண்டும்.

வாழைப்பழ ஃபேஷியல் செய்தால், அவை பாதிப்படைந்த சரும செல்களை சரிசெய்யவும், முகப்பருக்களைப் போக்கவும், சருமத்தை இறுக்கமடையச் செய்யவும் பெரிதும் உதவியாக இருக்கும். 

மாம்பழ ஃபேஷியல்

செய்முறை : மாம்பழத்தை மசித்து, அதில் சிறிது பால் சேர்த்து கலந்து, முகத்திற்கு ஃபேஷியல் செய்ய வேண்டும்.

மாம்பழத்தை வைத்து ஃபேஷியல் செய்தால், சருமப் பிரச்சனைகளான முதுமைத் தோற்றம் மற்றும் கரும்புள்ளிகள் போன்றவை நீங்கும். சருமம் இறுக்கமடைந்து, வறட்சி நீங்கி, முகம் பொலிவோடு இருக்கும்.

ஸ்ட்ராபெர்ரி ஃபேஷியல்

செய்முறை : ஸ்ட்ராபெர்ரியை தயிருடன் சேர்த்து கலந்து, வராத்திற்கு இரண்டு முறை முகத்திற்கு ஃபேஷியல் செய்ய வேண்டும்.

முகப்பருக்களை நீக்குவதற்கு ஸ்ட்ராபெர்ரி பெரிதும் துணையாக இருக்கும்.  

ஆப்பிள் ஃபேஷியல்

செய்முறை : ஆப்பிளை அரைத்து, அதோடு தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஃபேஷியல் செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

பழுப்பு நிற சருமம் மற்றும் பருக்கள் இருந்தால், அதனை சரிசெய்ய ஆப்பிள் ஃபேஷியல் சிறந்ததாக இருக்கும். 

ஆரஞ்சு ஃபேஷியல்

சிட்ரஸ் பழங்களில் ஆரஞ்சு பழத்தை வைத்து, ஃபேஷியல் செய்தால், வறட்சியில்லாத சருமத்தையும், இளமையான தோற்றத்தையும் பெறலாம்.


எலுமிச்சை ஃபேஷியல்

எலுமிச்சை அழகுப் பராமரிப்பில் பயன்படும் பொருட்களில் முக்கியமான ஒன்று. அதிலும் எலுமிச்சை ஒரு சரியான கிளின்சிங் பொருள். இதனை வைத்து முகத்திற்கு ஃபேஷியல் செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதோடு, பொலிவான சருமத்தைப் பெற முடியும்.

மூலிகை ஃபேஷியல் : 

முல்தானிமட்டி, பயத்தமாவு, கடலைமாவு, கஸ்தூரி மஞ்சள், சந்தனத் தூள் இவற்றை சிறிது எடுத்து தேங்காய்ப் பால் விட்டு கலந்து முகத்துக்கு பேக் போடுங்கள். 

இருபது நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவுங்கள். பிறகு கற்றாழை ஜெல்லில் ஒரு சொட்டு எலுமிச்சைச் சாறுவிட்டுக் கலந்து முகத்தில் பூசிக் கழுவுங்கள். 

இப்படி தினமும் செய்துகொள்ளலாம். குளிர்கால பாதிப்பிலிருந்து முகத்தை பாதுகாக்கும். சந்தனத்தூள் முகத்தில் இருக்கும் அழுக்கை போக்கும். கஸ்தூரி மஞ்சள், முல்தானிமட்டி முகத்தை பொலிவாக்கும். தேங்காய்ப் பால் சேர்ப்பதால் சருமத்தின் மிருதுத் தன்மை கூடும். முகத்தில் பருக்கள் இருந்தால், கொஞ்சம் வேப்பந்தளிரை அரைத்துச் சேர்த்து பேக் போடலாம்.

இளநீர் ஃபேஷியல் : 

சிலருக்கு 25 வயதிலேயே முகத்தில் சருமம் உலர்ந்து சுருங்கி வயோதிகத் தோற்றத்தைத் தந்துவிடும். அவர்கள், இளநீர் ஃபேஷியல் செய்துகொள்வது நல்ல பலனைத் தரும். 

இளநீரை பருத்தி பஞ்சில் தொட்டு முகத்தின் எல்லாப் பக்கமும் நன்றாக துடையுங்கள். சருமத்தைச் சுத்தமாக்கிவிடும். கடலை மாவு, மைதா மாவு இவற்றுடன் அரைத்த சந்தனம், தேன், இளநீர் கலந்து முகத்தில் பேக் போட்டு 15 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். 


வெளிப்புறத் தூசுகளால் அழுக்கு படிந்து களையிழந்து, மங்கி போன முகம் அழகாக ஜொலிக்கும்.