Skip to main content

புற்றுநோய் செல்களை உருவாக்கும் தினசரி உணவுகள் என்னென்ன...!

பாரம்பரிய உணவு, இயற்கையாக விளைந்த உணவுப் பொருட்களைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தவரை கொடிய நோய்களுக்கு உலகில் பெரிய வேலையில்லாமல் இருந்தது. துரித உணவு, ரெடிமேட் உண
வு, சத்தற்ற சக்கை உணவு உலகை ஆக்கிரமிக்கத் தொடங்கிய பிறகு நோய்கள் கட்டுப்பாடில்லாமல் வளர ஆரம்பித்தன. இன்று எந்த வித்தியாசமும் இன்றி யாருக்கு வேண்டுமானாலும் புற்றுநோய் வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் மாறிவிட்ட உணவுப் பழக்கம்தான்.

உலகச் சுகாதார நிறுவனத்தின் ஒரு அங்கமாகச் செயல்பட்டுவரும் புற்றுநோய்க்கான சர்வதேச ஆராய்ச்சி முகமையும் (ஐ.ஏ.ஆர்.சி.) இதை உறுதிப்படுத்தியிருக்கிறது. மனிதர்களுக்குப் புற்றுநோயை உண்டாக்கும் உணவுப் பொருட்களின் பட்டியலை அந்த அமைப்பு ஆய்வு செய்து வெளியிட்டிருக்கிறது. அந்த உணவு வகைகள் என்னென்ன?

பண்ணை மீன்கள்

பண்ணை மீன் வளர்ப்பு முறை இன்று பெரிய அளவில் வளர்ந்துவருகிறது. இங்கே வளர்க்கப்படும் மீன்களில் ‘பாலிகுளோரி னேனட் பிப்ஹெனைல்ஸ்’ இருப்பதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்த வேதிப்பொருள், புற்று நோய்க்கான காரணிகளில் ஒன்று. பண்ணைகளில் வளர்க்கப்படும் மீன்களின் வளர்ச்சிக்காகப் பூச்சிக் கொல்லிகள், ஆன்டிபயாட்டிக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றிலும் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய கார்சினொஜென் பொருள் உள்ளது.


பதப்படுத்தப்பட்ட இறைச்சி

இதைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் 18 சதவீதம் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இறைச்சியைப் பதப்படுத்தச் சோடியம் நைட்ரேட், சோடியம் நைட்ரைட் என இரண்டு வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த இறைச்சியில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய கார்சினோஜென் இருப்பதாக ஐ.ஏ.ஆர்.சி. வகைப்படுத்தியுள்ளது.

சோடா குளிர்பானம்

ஊட்டச்சத்து எதுவுமில்லாத சர்க்கரை, கலோரிகள் நிரம்பிய மென்பானங்களை பலரும் விரும்பி பருகுகின்றனர். ஆனால், இது உடலுக்கு மிகவும் தீங்கானது. தொடர்ந்து இந்தக் குளிர்பானங்களைப் பருகிவந்தால் இன்சுலின் அதிகரிப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இது கணையப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை இரண்டு மடங்காக அதிகரிக்கலாம். குளிர்பானத்துக்கு வண்ணமூட்டும் சர்க்கரையும் புற்றுநோய் வளர்ச்சிக்கான சாத்தியத்தை அதிகரிக்கிறது.



மரபணு மாற்றப்பட்ட உணவு

மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்களால் புற்றுநோய் ஏற்படுமா என்ற கேள்விகள் எப்போதும் முன்வைக்கப்படுகின்றன. மரபணு மாற்றப்பட்ட சோளம் பிரான்ஸில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில் புற்றுநோய் கட்டிகள், கல்லீரல் பாதிப்பு, சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தக்கூடிய ஆபத்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மைக்ரோவேவ் பாப்கார்ன்

பாப்கார்ன் சாப்பிடுவது தவறான விஷயமல்ல. ஆனால், மைக்ரோவேவ் பாப்கார்ன் என்றால் எச்சரிக்கைத் தேவை. இந்த வகையான பாப்கார்ன் ‘பெர்ஃப்ளூரெக்டனிக்’ என்ற அமிலத்துடன் இணைந்து உருவாக்கப்படுகிறது. இதில் சுவை மற்றும் மணத்துக்காகச் சேர்க்கப்படும் சுவையூட்டிகள் சூடாக்கப்படும்போது ரசாயன மாற்றம் அடைகின்றன. இதைச் சாப்பிடும்போது நுரையீரல் கோளாறு, மலட்டுத்தன்மை, புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை மாவு:

 மாவு இல்லாத உணவு வகைகள் மிகக் குறைவு. கடைகளில் பேக்கிங் செய்யப்பட்ட மாவு வகைகள் கிடைக்கின்றன. பார்ப்பதற்கு வெள்ளையாகத் தெரியும் இந்தச் சுத்திகரிக்கப்பட்ட மாவில் ஊட்டச்சத்து ஒரு சதவீதம்கூடக் கிடையாது. மாவை வெண்மையாக்க ‘குளோரின் காஸ்’ பயன்படுத்தப்படுகிறது. இப்படிச் செயற்கையாக வெண்மையாக்கப்படும் மாவுகளில் கிளைசெமிக் அளவு அதிகம், இது ரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கச் செய்யக்கூடியது. இன்சுலின் உருவாவதைத் தடுக்கவும் செய்யலாம். இதுபோன்ற மாவு வகைகள் உடலில் புற்றுநோய் செல்களை வளரச் செய்யக்கூடிய சாத்தியம் அதிகம்.


சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை

புற்றுநோயை உருவாக்கும் மிகப் பெரிய காரணிகளில் ஒன்று சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை. அதிக அமிலம் உள்ள உணவும் சர்க்கரைதான். சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை அதிகமாக உட்கொள்வதன் மூலம் உடல்பருமன் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். உடலில் தொடர்ந்து சேரும் அதிகக் கொழுப்பு, பல வகைப் புற்றுநோய்கள் உருவாகக் காரணமாக இருக்கிறது.


உப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு

உணவில் உப்பு மிகவும் முக்கியமான ஒரு பொருள். தினசரி உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பு காரணமாக வயிற்றுப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். உப்பில் உள்ள ‘ஹெலிகோபேக்டர்பைலோரி’ என்ற பாக்டீரியா, உடல் செயல்திறனை அதிகப்படுத்தக்கூடியது. இதன்காரணமாக வயிற்று எரிச்சல், அல்சர் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு, பின்னர் அதுவே வயிற்றுப் புற்றுநோயாக உருவெடுக்கலாம்.



சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்

உணவு பொருட்களில் மிக ஆபத்தான ஒன்றாக மாறி வருகின்றன சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் வகைகள். எண்ணெயைக் கெட்டியாக மாற்ற ஹைட்ரஜன் சேர்க்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களிலிருந்து தயாரிக்கப்படும் வனஸ்பதி நம் நாட்டில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது விலை குறைவாக இருப்பதும் அதிகப் பயன்பாட்டுக்கு முக்கியக் காரணம். இந்த வகையான எண்ணெய் பயன்பாட்டிலிருந்து உடலில் சேரும் கொழுப்பு, மார்பகப் புற்றுநோய் ஏற்பட வழிவகுக்கலாம்.




ஃபிரெஞ்ச் ஃபிரைஸ்

எண்ணெயில் பொரிக்கப்படும் ஃபிரெஞ்ச் ஃபிரைஸ் மற்றும் உருளைக் கிழங்கு சிப்ஸ் ஆகியவற்றில் அக்ரிலமைட் என்ற ரசாயனம் இருப்பது தெரியவந்துள்ளது. இது புற்றுநோயை உண்டாக்கக்கூடிய கார்சினோஜென் உடன் தொடர்புடையது. இதே வேதிப்பொருள்தான் புகைபிடித்தலிலும் உள்ளது. உணவில் அக்ரிலமைட் ஏற்படுவதற்கு அதிக வெப்பநிலையில், அது பொரிக்கப்படுவதே காரணம். பொரிக்கப்படும்போது ரசாயன மாற்றம் அடைந்து உணவில் தேவையற்ற அமினோஅமிலம் உண்டாகிவிடுகிறது.



சூடான பானங்கள் ஆபத்தா?

சூடான காபியைப் பருகினால் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது. ஆனால், இதை ஆய்வு செய்த புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச முகமை (ஐ.ஏ.ஆர்.சி.), சூடான காபியைப் பருகுவதால் புற்றுநோய் ஏற்படும் என்பதற்கான ஆதாரம் எதுவுமில்லை என்று கூறியுள்ளது. ஆனால், எந்த ஒரு திரவ உணவையும் 65 டிகிரி செல்சியஸுக்கு மேலான சூட்டில் பருகினால், புற்றுநோய் ஏற்படும் ஆபத்து இருப்பதாகக் கூறியுள்ளது. சூடான திரவ உணவைச் சாப்பிடும்போது தொண்டையில் பாதிப்பு ஏற்பட்டு உணவுக்குழாயில் புற்றுநோய் ஏற்படலாம் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.


அளவோடு இருந்தால் நலம்

இங்கே பட்டியலிடப்பட்டுள்ள உணவுப் பொருட்களைச் சாப்பிடுவதால் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றனவா என்பது குறித்து அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் வலிநிவாரணச் சிறப்பு மருத்துவர் அசார் உசைனிடம் கேட்டோம்:

“வெள்ளை மைதா, சிவப்பு இறைச்சி ஆகியவற்றை அதிகம் உண்ணும்போது புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியம் மிக அதிகம். இதேபோல எண்ணெயைத் திரும்பத் திரும்பச் சூடாக்கும்போது கார்பன் பொருள் அதிகரித்துவிடும். ரெடிமேட் உணவைப் பாதுகாக்கவும், துரித உணவு வகைகளில் சுவையைக் கூட்டவும் நிறைய வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.


வேதிப்பொருட்கள் அளவு அனுமதிக்கப்பட்ட அளவில் இருந்தால், பரவாயில்லை. கூடுதலாகச் சேர்க்கப்படும்போது புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியம் இல்லாமல் இல்லை. அதேநேரம் மருத்துவப் புள்ளிவிவரங்களின்படி, இந்த உணவைச் சாப்பிடுவோருக்குப் புற்றுநோய் வராமலும் இருந்திருக்கிறது. இவற்றைச் சாப்பிடாமல் இருப்பவர்களுக்கும் புற்றுநோய் வந்திருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. எதுவுமே அளவாக இருப்பது தான் மிகவும் நல்லது” என்கிறார் அசார் உசைன்.

Popular posts from this blog

அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்

கோயில் அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில் கோயில் வகை நட்சத்திர கோயில் மூலவர் சித்திரரத வல்லபபெருமாள்

களாக்காய் சிறப்பான மருத்துவ பயன்

“எப்போதோ கிடைக்கும் பலாக்காயை இப்போது கிடைக்கும் களாக்காய் மேல்” என்று ஒரு பழமொழி உண்டு. அந்தளவிற்கு சிறப்பான மருத்துவ பயன்களை கொண்டது களாக்காய். இந்த தாவரமானது காரைச் செடிபோன்று மலைகளில் தன்னிச்சையாக புதர் போல் வளரும். தோட்டங்களிலும் வளர்க்கப்படும். இது இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது.