Skip to main content

கடக ராசி வருட ராசி பலன் 2019

மனஉறுதியுடன் செயல்பட்டு வெற்றி காணும் கடக ராசி அன்பர்களே! 


சந்திரனை ஆட்சி நாயகனாக கொண்ட உங்களுக்கு சனிபகவானின் நற்கருணையோடு இந்த புத்தாண்டு தொடங்குகிறது. ஆண்டின் பெரும்பாலான காலத்தில் அவரால் நன்மை உண்டாகும். குருபகவான் குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தருவார். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மேலும் அவரது 5,7-ம் இடத்துப் பார்வைகள் சாதகமாக உள்ளதால் மேலும் நன்மைகள் அதிகரிக்கும். ஆனால் குருபகவான் மார்ச் 13ல் இருந்து மே 19 வரை அதிசாரம் பெற்று தனுசு ராசிக்கு செல்வதால் நற்பலன் சற்று குறையலாம். உடல்நலம் பாதிக்கப்படலாம். மனதில் தளர்ச்சி ஏற்படலாம். 

சனிபகவான் 6-ம் இடமான தனுசு ராசியில் நின்று நன்மைகளை வாரி வழங்குகிறார். முயற்சிகள் அனைத்தையும் வெற்றி அடையச் செய்வார். பணப்புழக்கத்தைக் கொடுப்பார். அபார ஆற்றல் பிறக்கும். எதிரிகளை இடம் தெரியாமல் ஆக்குவீர்கள். மேலும் சனியின் 10-ம் இடத்துப்பார்வை சிறப்பாக உள்ளது. அதன் மூலம் பொருளாதார வளம், காரிய அனுகூலம் உண்டாகும். தொழிலில் நல்ல முன்னேற்றத்தை கொடுப்பார். ஆனால் சனி ஏப்.26 முதல் செப்.13 வரை வக்கிரம் அடைகிறார். இதனால் அவர் தரும் நற்பலன்கள் சற்று குறையலாம்.




மொத்தத்தில் ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டக்காற்று உங்கள் பக்கம் வீசும். ஆண்டுத்தொடக்கத்தில் கூடுதல் பலன் கிடைக்கும். அதற்காக பிற்பகுதியில் சுமாரான பலனோ எனக் கவலை கொள்ள வேண்டாம். எல்லாச் செயல்களையும் சிறப்பாக செய்து முடிக்கலாம். தடைகள் வந்தாலும் அதை துாசி போல துடைத்தெறிவீர்கள். பொருளாதார வளம் இருந்து கொண்டே இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். அவ்வப்போது செலவுகள் வந்தாலும் அதை ஈடுகட்டும் அளவுக்கு வருமானம் இருக்கத் தான் செய்யும். மக்கள் மத்தியில் மதிப்பு உயரும். மார்ச் 13ல் இருந்து மே 19 வரை மற்றவர் விஷயத்தில் தலையிட வேண்டாம்.




குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கிக் குவிப்பீர்கள். தம்பதியிடையே ஒற்றுமை ஏற்படும். புதிய சொத்து, வீடு, மனை வாங்க யோகம் உண்டு. கார், டூ வீலர் போன்ற வாகனங்களும் வாங்கலாம். சிலர் வசதியான வீட்டிற்கு குடிபுகுவர். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். அதுவும் மார்ச் 13க்குள் நல்ல வரனாக அமையும். அதன் பிறகு அக்கம்பக்கத்தினரிடம் அனுசரித்து போகவும். தம்பதியிடையே மனக்கசப்புகள் வரலாம், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். மே 19 முதல் அக்.26 வரை கணவன், மனைவி இடையே இருந்த பிரச்னை மறையும்.




பணியாளர்கள் வேலையில் சீரான முன்னேற்றம் காண்பர். பணியிடத்தில் திறமை பளிச்சிடும். பதவி உயர்வு, சம்பள உயர்வு தானாக வரும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். 

கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். விரும்பிய இடத்துக்கு மாற்றம் பெறலாம். வேலை இன்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புண்டு. சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். ஆனால் மார்ச் 13 முதல் மே 19 வரை வேலைப்பளு அதிகரிக்கும். ஆனாலும் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். சிலர் மனக்குழப்பத்தினால் வேலையில் ஆர்வமில்லாமல் இருப்பர். உங்கள் வேலையை அடுத்தவரிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது. மே 19 முதல் அக். 26-ந் தேதி வேலைப்பளு குறையும். சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர். பிப்.13க்கு பிறகு போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலை அடைவர். சிலருக்கு புதிய பதவி தேடி வரும்.




வியாபாரிகள் சிறப்பான நிலையில் இருப்பர். புதிய வியாபார முயற்சி அனுகூலத்தை தரும். வியாபாரத்தை மேலும் விரிவுப்படுத்த லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை பலப்படும். வாடிக்கையாளர்களிடம் மதிப்பு உயரும். 

அரசிடம் இருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலையின்றி இருப்பவர்கள் சுயதொழில் தொடங்க வாய்ப்புண்டு. அதுவும் மார்ச் மாதத்துக்குள் ஆரம்பிப்பது நல்லது. மார்ச் 13 முதல் மே 19-ந் தேதி வரை சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியதிருக்கும். 




கலைஞர்கள் பொருளாதாரத்தில் சிறந்து விளங்குவர். புதிய ஒப்பந்தங்கள் தடையின்றி கிடைக்கும். அரசிடமிருந்து விருது, பாராட்டு கிடைக்க வாய்ப்புண்டு. சிலர் தொழில்ரீதியாக வெளிநாடு சென்று வரலாம். ஆனால் மார்ச் 13ல் இருந்து மே 19 வரை புதிய ஒப்பந்தம் கையெழுத்தாக கூடுதல் முயற்சி தேவைப்படும். அப்போது பணப்புழக்கத்திற்கு குறைவிருக்காது. 

அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் எதிர்பார்த்த பதவி, பாராட்டு கிடைக்கப் பெறுவர். மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். 




மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டு சிறப்பாக இருக்கும். தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவர். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர். ஆனால் மார்ச் 13ல் இருந்து மே19 வரை விடாமுயற்சி தேவைப்படும். ஆனால் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். சிலர்வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெறுவர்




விவசாயிகள் சீரான முன்னேற்றம் காண்பர். ஆண்டின் தொடக்கத்தில் நெல், கோதுமை, கொண்டைகடலை, எள், கொள்ளு, பயறு வகைகளில் நல்ல மகசூலைப் பெறுவர். 

மண்ணில் எதைப் போட்டாலும் அது பொன்னாக மாறும் காலம். புதிய சொத்துகள் வாங்கலாம். சிலர் நவீன விவசாயத்தை பயன்படுத்தி வருமானத்தை பெருக்குவர். கூலி வேலை செய்பவர்கள் மன நிம்மதியும், பொருள் சேர்க்கையும் காண்பர். 

பிப்.12க்கு பிறகு வழக்கு, விவகாரங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். 




பெண்கள் குதூகலமாக காணப்படுவர். குடும்பத்தில் உங்களது கை ஓங்கி நிற்கும். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். 

பிள்ளைகளால் பெருமை சேரும். புத்தாடை, அணிகலன்கள் வாங்குவர். வேலைக்கு செல்லும் பெண்கள் நல்ல வளர்ச்சி காண்பர். சுயதொழில் செய்யும் பெண்களுக்கு வங்கிக்கடன் எளிதாக கிடைக்கும். மார்ச் 13ல் இருந்து மே 19 வரை குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்வர். பெண்காவலர்களுக்கு புதிய பதவி தேடி வரும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் அக்கம்பக்கத்தினரால் தொல்லை ஏற்படலாம். 




உடல்நலம் சிறப்பாக இருக்கும். நோய்நொடி பறந்தோடும். ஆனால் மார்ச் 13ல் இருந்து மே 19 வரை சிலர் வீண் கவலைக்கு ஆளாகலாம்.




பரிகாரம்:




* திங்கட்கிழமையில் சிவாலய தரிசனம்

* ராகு காலத்தில் காலபைரவர் வழிபாடு

* செவ்வாயன்று முருகனுக்கு அபிஷேகம்




பாடுங்க! பாடுங்க




வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி

மீளாளே ஆளென்னைக் கொண்டாய் போற்றி

ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி

ஓவாத சத்தத்து ஒலியே போற்றி

ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி

ஆறங்கம் நால்வேதம் ஆனாய் போற்றி

காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி

Popular posts from this blog

அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்

கோயில் அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில் கோயில் வகை நட்சத்திர கோயில் மூலவர் சித்திரரத வல்லபபெருமாள்

களாக்காய் சிறப்பான மருத்துவ பயன்

“எப்போதோ கிடைக்கும் பலாக்காயை இப்போது கிடைக்கும் களாக்காய் மேல்” என்று ஒரு பழமொழி உண்டு. அந்தளவிற்கு சிறப்பான மருத்துவ பயன்களை கொண்டது களாக்காய். இந்த தாவரமானது காரைச் செடிபோன்று மலைகளில் தன்னிச்சையாக புதர் போல் வளரும். தோட்டங்களிலும் வளர்க்கப்படும். இது இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது.