மனதாலும் பிறருக்கு தீங்கு நினைக்காத மகர ராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு உச்சமாக இருக்கும் செவ்வாய் நன்மை தரும் நிலையில் புத்தாண்டு மலர்கிறது. ஆண்டின் தொடக்கம் சிறப்பாக அமையும். ராசிநாதன் சனிபகவான் பல்வேறு இன்னல்களையும், இடையூறுகளையும் தந்து கொண்டிருக்கிறார். கேதுவும் நன்மை தரும் இடத்தில் இல்
லை. ஆனால் குருபகவான் உங்களை கீழே விழாமல் தாங்கி பிடித்திருப்பார்.
குருபகவான் வெற்றி பல தந்து பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணச் செய்வார். மேலும் அவரின் 7 மற்றும் 9-ம் இடத்து பார்வைகள் சிறப்பாக உள்ளன. அதன் மூலம் நன்மைகள் கிடைக்கும். ஆனால் மார்ச்13ல் இருந்து மே19 வரை அதிசாரமாகி குருபகவான் தனுசு ராசியில் இருக்கிறார். இது சுமாரான இடமே. அப்போது அவரால் பணவிரயம் ஏற்படும். வீண்அலைச்சல் ஏற்படும்.
சனிபகவானால் பொருளாதார இழப்பு வரலாம். அடிக்கடி வெளியூர் பயணம் ஏற்படும். எதிரிதொல்லை குறுக்கிடலாம். சனி சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரின் 7-ம் இடத்துப்பார்வை மிதுனத்தில் விழுகிறது. இது சிறப்பான இடம். இதன் மூலம் பொருளாதாரம் பெருகும். உங்கள் ஆற்றல் மேம்படும். தனுசு ராசியில் இருக்கும் சனிபகவான் ஏப்.26 முதல் செப்.13 வரை வக்கிரம் அடைகிறார். இந்த காலத்தில் கெடுபலன் தர மாட்டார். மொத்தத்தில் இந்த ஆண்டில் எரிமலை பாதியாகவும், பனிமலை மீதியாகவும் நன்மை, தீமை கலந்திருக்கும்.
ஆண்டின் முற்பகுதியில் குருவாலும், பிப்.13க்கு பிறகு ராகுவாலும் நற்பலன் காணலாம். எந்த ஒரு செயலையும் வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பொருளாதார வளம் சிறக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அதே நேரம் மார்ச் 13ல் இருந்து மே19 வரை குரு சாதகமற்ற இடத்தில் இருப்பதால் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனம் தேவை. புதிய வாகனங்கள் வாங்க யோகமுண்டு. ஆனால் அதற்கு விடாமுயற்சி தேவைப்படும்.
குடும்பத்தில் கணவன், மனைவி இடையே அன்பு பெருகும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். சுபநிகழ்ச்சிகள் குருவின் பார்வையால் சிறப்பாக நடக்கும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர் வகையில் எதிர்பார்த்த அனுகூலம் உண்டாகும். சகோதரிகளால் பொன், பொருள் சேரும். உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்க யோகமுண்டு. மார்ச்13ல் இருந்து மே19 வரை திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு தடை வரலாம். உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். முயற்சி எடுத்தால் மட்டுமே செயல் நிறைவேறும்.
பணியாளர்களுக்கு திருப்திகரமான நிலை இருக்கும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். விண்ணப்பித்த கோரிக்கைகள் நிறைவேறும். மேலதிகாரிகள் அனுசரணையுடன் இருப்பர். வழக்கமான பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். சகபெண் ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். குருவின் 9-ம் இடத்துப்பார்வையால் செல்வாக்கு மேம்படும். மார்ச் 13ல் இருந்து மே19 வரை வேலையில் சற்று பின்தங்கிய நிலை ஏற்படலாம். எனவே பொறுமையும் நிதானமும் தேவை. அரசு வேலையில் இருப்பவர்கள் அதிக அக்கறையுடன் பணியாற்றுவது நல்லது. முக்கிய பொறுப்புகளை மற்றவரிடம் ஒப்படைக்க வேண்டாம். நவம்பர், டிசம்பர் மாதங்களில் அரசு ஊழியர்கள் முன்னேற்றம் காணலாம். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.
வியாபாரத்தில் சீரான ஆதாயம் கிடைக்கும். வெளியூர் பயணம் மூலம் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். பகைவர்களை வெற்றி கொள்வீர்கள். பெண்கள் வகையில் இருந்த இடர்ப்பாடுகள் மறையும். அதே பெண்கள் தவறை உணர்ந்து உங்களுக்கு உதவிகரமாக செயல்படுவர். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் அடையும். பணத்திற்காக நீங்கள் கையேந்தி நிற்கும் நிலை மாறுவதோடு, பிறரை உங்களை அண்டி நிற்கும் நிலை உருவாகும். தரகு, கமிஷன் போன்ற தொழில் சிறப்பாக நடக்கும். மார்ச் 13ல் இருந்து மே 19 வரை எதிரிகளின் வகையில் சற்று கவனமாக இருக்க வேண்டும். தொழிலதிபர்கள் அரசின் சோதனைக்கு ஆளாகலாம். தொழிலில் அதிக முதலீடு செய்ய வேண்டாம். அறிவை பயன்படுத்தி வருமானம் காணலாம். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம். வீண் செலவும் ஏற்பட வாய்ப்புண்டு. கவனம் தேவை.
கலைஞர்கள் ரசிகர்களின் மத்தியில் புகழ், பாராட்டைப் பெறலாம். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மார்ச் 13ல் இருந்து மே 19 வரை தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் பிரதிபலன் எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியதிருக்கும். தொண்டர்களின் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர்.
மாணவர்கள் கல்வியில் வளர்ச்சி காண்பர். தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய நிறுவனத்தில் இடம் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு சென்று படிக்க வாய்ப்புண்டு. குருவின் 9-ம் இடத்துப் பார்வை மூலம் பாடத்தில் மட்டும் அல்லாமல் விளையாட்டு போட்டிகளிலும் வெற்றி காண்பர். ஆனால் மார்ச் 13 முதல் மே19 வரை விடாமுயற்சி தேவைப்படும். ஆசிரியர்களின் வழிகாட்டுதலை ஏற்று நடப்பது நல்லது.
விவசாயத்தில் உழைப்பிற்கு ஏற்ற பலனைக் காணலாம். பிப்.13க்கு பிறகு மகசூல் அதிகரிக்கும். குறிப்பாக நெல், கோதுமை, கேழ்வரகு மற்றும் பயறுவகைகளில் அதிக ஆதாயம் கிடைக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்க யோகமுண்டு. வழக்கு, விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பக்கத்து நிலத்துக்காரர் வகையில் இருந்த தொல்லை மறையும்.
பெண்கள் குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். உங்களால் குடும்பம் சிறப்படையும். பிறந்த வீட்டில் இருந்து நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பொருட்கள், சொத்துகள் கிடைக்க வாய்ப்புண்டு. சகோதர வழியில் பணஉதவி கிடைக்கும். குருவின் 9-ம் இடத்துபார்வையால் சுப நிகழ்ச்சிகள் பற்றி பேச்சில் நல்ல முடிவு கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அதிகாரிகளின் கருணையால் பதவி உயர்வு கிடைக்கும். மார்ச் 13 முதல் மே 19 வரை தனியார் துறையில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டும். வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்து நடக்கவும்.
பரிகாரம்:
* சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு
* வளர்பிறை சஷ்டியில் முருகனுக்கு அர்ச்சனை
* பவுர்ணமியன்று அம்மன் கோயிலில் தீபம்
பாடுங்க! பாடுங்க
செங்கமலப் பொற்பாதம் இரண்டும் போற்றி
சீர்கழல்கள் போற்றி செஞ்சேவல் போற்றி
பூங்கமலப் போதொளி செம்மேனி போற்றி
பொன்னரை ஞாண் பொற்பட்டு பணிகள் போற்றி
தேங்கமழும் மலர்மாலை மார்பகம் போற்றி
திருக்கரங்கள் கண்கள் ஈராறும் போற்றி
ஓங்கு பெருங் கருணை முகம் ஆறும் போற்றி
ஒண்சுடரே திருமுருகா போற்றி போற்றி