கலை ரசனையுடன் செயல்பட்டு வரும் ரிஷப ராசி அன்பர்களே!
ராசிக்கு நட்பு கிரகமான குருபகவான் நன்மை தரும் நிலையில் புத்தாண்டு மலர்கிறது. ஆண்டின் தொடக்கம் சிறப்பாக அமையும். 7-ம் இடத்தி
ல் இருந்து குரு பல்வேறு நன்மைகளை தந்து கொண்டிருக்கிறார். அவரால் பொருளாதாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். மேலும் குருவின் 5-ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். சுபநிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும்.
செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் கையில் அதிகரிக்கும். ஆடம்பர வசதி அதிகரிக்கும். பணியாளர்களுக்கு உயர்வு கிடைக்கும். குருபகவான் மார்ச் 13ல் இருந்து மே 19வரை அதிசாரம் பெற்று தனுசு ராசியில் இருக்கிறார். அப்போது அவரால் நன்மை தர இயலாது. இந்நிலையில் பொருளாதார சரிவை ஏற்படுத்துவார். வீண் விரோதம் ஏற்படும். வாழ்வில் பல்வேறு தொல்லைகளை கொடுப்பார். ஆனால் அவரது 7-ம் இடத்துப்பார்வை மூலம் பிரச்னையை முறியடிக்கும் வலிமை கிடைக்கும். ஆற்றல் மேம்படும். மந்த நிலை மாறும். மனதில் துணிச்சல் பிறக்கும். பணவரவால் தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர் சதி உங்களிடம் எடுபடாது. மேலும் அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும்.
சனிபகவான் தற்போது 8-ம் இடமான தனுசு ராசியில் இருப்பது அவ்வளவு சிறப்பானதல்ல. அவர் முயற்சிகளில் சிறுதடைகளை உருவாக்குவார். உறவினர் வகையில் மனக்கசப்பும், கருத்து வேறுபாடும் ஏற்படும். சிலர் ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை வரலாம். ஏப்.26 முதல் செப்.13 வரை சனிபகவான் வக்ரத்தில் உள்ளார். இந்த காலக்கட்டத்தில் சனியின் பலம் சற்று குறையும். ஆனால் கெடுபலன்கள் நடக்காது.
குடும்பத்தில் தெய்வ அனுகூலம் இருக்கும். மனதில் பக்தி உயர்வு மேம்படும். பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும்.
நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். தொழிலில் லாபம் அதிகரிக்கும். வசதி, வாய்ப்புகள் பெருகும். எடுத்த முயற்சி வெற்றி அடையும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். கணவன், மனைவி இடையே அன்பு பெருகும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். புத்தாடை, அணிகலன்கள் வாங்க வாய்ப்புண்டு. உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். மேலும் குருபகவானின் 5-ம் இடத்துப்பார்வை மூலம் பொருளாதாரம் மேம்படும். மார்ச் 13ல் இருந்து மே 19 வரை குடும்பத்தில் பிரச்னை குறுக்கிடலாம். கணவன்-, மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். பொருள் இழப்பு ஏற்படலாம். உறவினர்கள் வகையில் கருத்துவேறுபாடு வரலாம். இருப்பினும் அவரது 7-ம் இடத்து பார்வையால் கணவன், மனைவி இடையே இருந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
பணியாளர்கள் ஆண்டின் தொடக்கத்தில் குருவின் பலத்தால் நல்ல வளத்தைக் காணலாம். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகள் அனுசரணையாக செயல்படுவர். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிலர் வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். மார்ச் 13ல் இருந்து மே 19 வரை வேலையில் பளு குறுக்கிடலாம். சிலருக்கு வெளியூர் செல்ல நேரிடலாம்.
அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். அரசு வேலையில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்கவும். அவர்களுக்கு சலுகை, கடன் போன்ற கோரிக்கைகள் நிறைவேற தாமதமாகும். அக்.26க்கு பிறகு நிலைமை சீராகும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். கோரிக்கைகள் நிறைவேறுவது அவ்வளவு எளிதல்ல. பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும்.
தொழில், வியாபாரிகள் ராகுவால் தற்போது சீரான நிலையில் இருப்பர். நஷ்டம் தவிர்க்கப்படும். வாடிக்கையாளர்கள் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். மார்ச் 13-ந் தேதியில் இருந்து மே 19-ந் தேதி வரை ஓய்வு என்பதே இல்லாத நிலைக்கு தள்ளப்படுவீர்கள்.
எதிர்பார்த்த வருமானம் கிடைக்காமல் போகலாம். யாரையும் எளிதில் நம்பிவிட வேண்டாம். சிலர் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி பணத்தை இழக்க நேரிடலாம். வீண் அலைச்சல் ஏற்படலாம். அரசு வகையில் எந்த உதவியும் கிடைக்காமல் போகலாம். மேலும் வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். சிலர் தற்போதுள்ள இடத்தை வேறு இடத்துக்கு மாற்றும் நிலை ஏற்படலாம். புதிய வியாபாரம் தற்போது வேண்டாம். எது எப்படியானாலும் அக்டோபர் 26-ந் தேதி முதல் உங்கள் நிலையில் நல்ல மாற்றம் ஏற்படும். அதன்பின் நல்ல லாபம் கிடைக்கும்.
புதிய வியாபாரத்தை தொடங்கலாம். வேலையின்றி இருப்பவர்கள் தொழில் ஆரம்பிக்கலாம்.
கலைஞர்கள் ஆண்டின் தொடக்கத்தில் சிறப்பான நிலையில் இருப்பர். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். சமூகத்தில் மதிப்பு பாராட்டு வந்து சேரும். சிலருக்கு அரசிடமிருந்து விருது, பட்டம் கிடைக்கும். பொதுநல சேவகர்கள் நல்ல வளத்தைக் காண்பர்.
புதிய பதவி தேடிவரும். ஆனால் மார்ச் 13ல் இருந்து மே 19 வரை சிரத்தை எடுத்தே புதிய ஒப்பந்தம் பெற வேண்டியதிருக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் பிரதிபலன் எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியதிருக்கும். தொண்டர்களுக்காக பணம் செலவழிக்க நேரிடும்.
மாணவர்கள் தேர்வில் தேர்ச்சியும், நல்ல மதிப்பெண்களும் பெறுவர். ஆனால் மார்ச் 13ல் இருந்து மே 19 வரை சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பது அவசியம். சிலர் தகாதவர்களோடு சேர வாய்ப்புண்டு.
கவனம் தேவை. மே 19க்கு பிறகு போட்டிகளில் வெற்றி கிடைக்கும். ஆசிரியர்கள், ஆன்றோர்களின் ஆதரவு கிடைக்கும். விரும்பிய நிறுவனத்தில் சேரும் பாக்கியம் உண்டு.
விவசாயிகள் ஆண்டின் தொடக்கத்திலும், இறுதியிலும் நல்ல பலனைக் காணலாம். மார்ச் 13 வரை நெல், கேழ்வரகு, பழ வகைகள், சோளம் போன்றவற்றின் மூலம் சிறப்பான மகசூல் கிடைக்கும். வழக்குகளின் முடிவு சாதகமாக அமையும். மார்ச் 13 முதல் மே 19- வரை கால்நடை வளர்ப்பின் மூலம் அவ்வளவாக வருமானம் கிடைக்காது. வழக்கு, விவகாரங்களில் சிலர் தங்கள் கையிருப்பை இழக்க நேரிடலாம். ஜுன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் எள், உளுந்து, கொள்ளு, பனை போன்றவற்றில் நல்ல வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்க அனுகூலம் உண்டு.
பெண்கள் உற்சாகத்துடன் காணப்படுவர். உறவினர்கள் இல்ல சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகிடைக்கும். கணவன் மற்றும் குழந்தைகளுடன் புனித தலங்களுக்கு சென்று வருவர். மார்ச் 13 முதல் மே 19 வரை கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும்.
பரிகாரம்:
* வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை
* அஷ்டமியன்று பைரவருக்கு வடைமாலை
* சனியன்று சனீஸ்வரருக்கு எள் தீபம்
பாடுங்க! பாடுங்க
கல்லாலின் புடையமர்ந்து நான்மறை
ஆறங்க முதல் கற்ற கேள்வி
வல்லவர்கள் நால்வருக்கும் வாக்கிறந்த
பூரணமாய் மறைக்கப் பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை
இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல்
நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்