குடும்பத்தினர் மீது பாசம் மிக்க மேஷ ராசி அன்பர்களே!
நட்புக்கிரகமான சுக்கிரன் சாதகமாக இருக்கும் நிலையில் புத்தாண்டு மலர்கிறது. ஆண்டின் தொடக்கத்தில் குருபகவான் உங்களுக்கு சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் நீங்கள் அஞ்ச வேண்டாம்.
அவரது 7-ம் இடத்துப்பார்வையால் நன்மை காண்பீர்கள்.
எந்த இடையூறுகள் வந்தாலும் அதை குருவின் பார்வை முறியடித்து வெற்றிக்கு வழிவகுக்கும். எனவே குரு சாதகமற்ற நிலையில் இருக்கிறாரே என கவலை கொள்ள வேண்டாம். அவர் மார்ச் 13ல் இருந்து மே 19 வரை அதிசாரம் பெற்று தனுசு ராசியில் இருக்கிறார். இது சிறப்பான நிலை. அப்போது அவரால் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகமுடன் பணியில் ஈடுபடுவீர்கள்.
நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் கூடும். தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும்.
தம்பதியர் இடையே ஒற்றுமை மேம்படும். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு.
சனிபகவான் தனுசு ராசியில் இருப்பதால் எதிரிகளின் இடையூறு தலைதூக்கும், பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும்.
ஆனால் அவர் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது பார்வையால் நன்மை கிடைக்கும். அவர் 3,7,10-ம் இடங்களை பார்க்கிறார். இந்த மூன்று பார்வைகளும் சிறப்பாக உள்ளது. மேலும் ஏப்.26 முதல் செப்.13 வரை வக்கிரம் அடைந்தாலும் தனுசு ராசியிலேயே இருக்கிறார். இந்த காலகட்டத்தில் கெடுபலன்கள் சற்று குறையும்.
மொத்தத்தில் ஆண்டின் முற்பகுதி சுமாராக இருந்தாலும், அதன் பின் படிப்படியாக நன்மை அதிகரிக்கும்.
ஆண்டின் தொடக்கத்தில் செலவு அதிகரிக்கும். முயற்சியில் சிறு தடைகள் குறுக்கிடலாம். சமூகத்தில் மதிப்பு சுமாராகத் தான் இருக்கும். ஆனால் மார்ச் 13க்கு பிறகு மனதில் தெளிவு பிறக்கும். செல்வாக்கு மேம்படும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர வசதி பெருகும்.
குடும்பத்தில் கடந்த காலத்தில் இருந்த சண்டை, சச்சரவு மறையும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். கணவன், மனைவி இடையே ஒற்றுமை மேம்படும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். உறவினர் வகையில் நல்ல அனுகூலமான போக்கு இருக்கும். அவர்கள் பகையை மறந்து ஒன்று சேருவர். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க வாய்ப்புண்டு. சிலர் வசதியான வீட்டுக்கு குடிபுகுவர். மே 19க்கு பிறகு உறவினர் வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை.
பணியாளர்களுக்கு ஆண்டு தொடக்கத்தில் வேலைப்பளு இருக்கலாம். வீண்அலைச்சல் ஏற்படலாம். ஆனால் உங்களின் அயராத உழைப்புக்கு தகுந்த பலன்கள் மார்ச்13ல் இருந்து கிடைக்கும். பணியில் திருப்தி காண்பீர்கள். மேலதிகாரிகள் ஆதரவுடன் செயல்படுவர். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். வேலையின்றி இருப்பவர்கள் விடாமுயற்சி செய்தால் மட்டுமே வேலை கிடைக்க வாய்ப்புண்டு. அக்.26க்கு பிறகு வேலைப்பளு குறையும். மேலதிகாரிகளின் ஆதரவு இருக்கும்.
வியாபாரம் செய்பவர்கள் சீரான வளர்ச்சி காண்பர். ராகுவால் எதிரிதொல்லை அவ்வப்போது தலைதூக்கலாம். ஆனால் பிப்.13க்கு பிறகு பிரச்னை அனைத்தும் தடம் தெரியாமல் மறையும். சிலர் மூலதனத்தை அதிகப்படுத்தி வியாபாரத்தை விரிவுபடுத்துவர். வியாபார விஷயமாக வெளிநாடு செல்ல நேரிடும். பெண்களை பங்குதாரர்களாக கொண்ட வியாபாரம் தழைத்தோங்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலப்படும். மார்ச், ஏப்ரல் மாதங்களில் லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் முயற்சி வெற்றி பெறும்.
வேலையின்றி இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம். மே 19 முதல் அக்.26 வரை தடைகள் குறுக்கிட்டாலும் வெற்றி காண்பீர்கள்.
குருவின் பார்வைகளால் தடைகளை தகர்ப்பீர்கள். வீண் விரயம் ஏற்பட வாய்ப்புண்டு. அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். செவ்வாயால் ஆன்மிக சம்பந்தப்பட்ட மற்றும் பூஜை பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபம் பெறுவர். நவம்பர், டிசம்பர் மாதங்களில் அரசு வகையில் இருந்த அனுகூலமற்ற போக்கு மறையும்.
கலைஞர்கள் அதிக சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியதிருக்கும். மார்ச்13ல் இருந்து மே19 வரை ரசிகர்களின் மத்தியில் நற்புகழ் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்க சற்று முயற்சி தேவைப்படும். ஆனால் பணப்புழக்கத்திற்கு குறைவிருக்காது.
மாணவர்கள் சிலர் அலட்சியப் போக்கால் படிப்பில் கவனம் செலுத்தாமல் போகலாம். இருப்பினும் குருவின் பார்வையால் ஆசிரியர்களின் அறிவுரை கிடைக்கும். மார்ச் 13ல் இருந்து மே 19 வரை சிறப்பான பலனைக் காணலாம். தேக்கநிலை மறையும். மேற்படிப்பு தொடரும். விரும்பிய பாடம் கிடைக்கும்.
விவசாயிகள் பிப்.13க்கு பிறகு நற்பலனைக் காணலாம். நவீன வேளாண்மையை பின்பற்றி அதிக மகசூலும், வருமானமும் காண்பர்.
பெண்கள் தேவைகளை குறைத்துக் கொள்ளவும். வீட்டுக்கு வெளியில் பெருமையாக பேசப்பட்டாலும் வீட்டில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. இல்லையென்றால் மனஉளைச்சலுக்கு ஆளாவீர்கள். மார்ச் 13ல் இருந்து மே19 வரை ஆன்மிக சிந்தனை மேலோங்கும். குடும்பத்துடன் புண்ணியத்தலங்களுக்கு சென்று வருவர். பிள்ளைகளின் எதிர்கால வளர்ச்சி குறித்து ஆலோசிப்பர்.
பரிகாரம்:
* சதுர்த்தியன்று விநாயகருக்கு அர்ச்சனை
* வெள்ளியன்று ராகுகாலத்தில் துர்க்கை வழிபாடு
* சனியன்று ஆஞ்சநேயருக்கு துளசி மாலை
பாடுங்க! பாடுங்க
உம்பர்தரு தேனுமணிக் கசிவாகி
ஒண்கடலில் தேனமுதத்து உணர்வூறி
இன்ப ரசத்தே பருகி பலகாலும்
என்றனுயிர்க்கு ஆதரவுற்று அருள்வாயே
தம்பி தனக்காக வனத் தணைவோனே
தந்தை வலத் தாலருள் கைக்கனியோனே
அன்பர் தமக்கான நிலைப் பொருளோனே
ஐந்து கரத்து யானைமுகப் பெருமாளே