இடுப்பில் தண்டுவட எலும்புகள் முடியுமிடத்தில், சிலருக்கு கடும் வலி தோன்றி, இயல்பான பணிகளை மேற்கொள்ள முடியாமல் சிரமப்பட்டு வருவர். அவர்கள், அம்மியில் இஞ்சியின் சாற்றை சிலதுளிகள் விட்டு, சிறு துண்டுகளாக வெட்டிய உலர்ந்த சித்தரத்தையை அதில் வைத்து
தேய்க்க, சித்தரத்தையின் நார்ப்பகுதி தனியே வரும், அதை எடுத்துக் கொண்டு, சிறிது இஞ்சி சாற்றை மறுபடியும் கலந்து, தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து, அந்த கலவையை இளஞ்சூட்டில், இடுப்பில் வலி உள்ள பகுதியில் தடவிவர, விரைவில் இடுப்பு வலி விலகிவிடும்.
இருமலை தணிக்க : இந்த பாதிப்பை போக்க, உலர்த்தி சிறு துண்டுகளாக வெட்டிய ஒன்றிரண்டு சித்தரத்தையை, மூன்று தம்ளர் தண்ணீரில் இட்டு கொதிக்கவைத்து, தண்ணீர் மூன்றில் ஒரு பங்காக சுண்டிவரும் வேளையில், நீரை எடுத்து வைத்துக் கொண்டு, தினமும் இருவேளை, சில நாட்கள் தொடர்ந்து பருகிவர, வறட்டு இருமலாக பல நாட்கள் தொல்லை தந்து வந்த இருமல் யாவும் ஓடிவிடும். சித்தரத்தை சளியை ஏற்படுத்தும் ஸ்ட்ரெப்டோ காக்கஸ் வகை பாக்டீரியாக்களை அழித்து ஒழிக்கும் ஆற்றல் மிகுந்து விளங்குவதால்தான், அநேகம் மேலைமருந்துகளில், சித்தரத்தையின் மூலங்கள் சேர்க்கப்படுகின்றன.
அஜீரணத்திற்கு : உலர்ந்த சித்தரத்தை ஒரு துண்டு எடுத்து, வாயில் இட்டு சுவைக்க, நாக்கில் காரம் கலந்த விறுவிறுப்பு தன்மை தோன்றும், அப்போது சுரக்கும் உமிழ்நீரை விழுங்கிவர, குமட்டல், வாந்தி பாதிப்புகள் சரியாகி விடும். மேலும், இதுவே, வறண்ட இருமலையும் போக்கும் ஆற்றல் வாய்ந்தது. உடல் சூட்டினால் ஏற்படும் உடல் பாதிப்புகளுக்கு சிறந்த தீர்வாக, சித்தரத்தை மருந்து அமையும்.
குழந்தைகளுக்கு : குழந்தைகளின் மாந்தம் எனும் பால் செரியாமை, இளைப்பு சளி போன்ற பாதிப்புகள் விலக. உலர்ந்த சித்தரத்தை துண்டை விளக்கெண்ணையில் தோய்த்து நெருப்பில் இட்டு கரியாக்கி, அதை தேனில் தேய்க்க உண்டாகும் தேன் கலந்த தூளை, கைக்குழந்தைகளுக்கு நாக்கில் தடவ, விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
ஆஸ்துமா குணப்படுத்த : சிலர், இரைப்பு இருமல் எனும் ஆஸ்துமா பாதிப்பால், மூச்சடைக்கும் வேதனையை அடைவார்கள். அவர்கள், சித்தரத்தை, அதிமதுரம், தாளிசபத்திரி, திப்பிலி மற்றும் மிளகு ஆகிய மூலிகைகளை இலேசாக வறுத்து, அரைத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு, தினமும் இதில் சிறிதளவு எடுத்து, தேனில் குழைத்து சாப்பிட்டுவர, பாதிப்புகள் விரைவில் நீங்கிவிடும். இதையே, அடிக்கடி சளித்தொல்லையால் பாதிக்கும் குழந்தைகளுக்கும் அளித்து வர, விரைவில் குணமடைவர்.