மணத்தக்காளி கீரையை நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்துவதன் மூலம் உணவாகவும், மருந்தாகவும் பயன் தருகிறது. அதே போல் மேற்பூச்சு மருந்தாகவும் பயன் தருகிறது. தோல் நோய்களின் தொல்லைகளில்
இருந்து விடுபட உதவுகிறது. மலச்சிக்கலை போக்குகிறது. இதன் காய்களை வற்றலாக்கி அதை உண்பதன் மூலம் சர்க்கரை நோய்க்கும் மருந்தாக மணத்தக்காளி பயன்தருகிறது. ரத்த அழுத்தத்தை இது தணிக்கிறது. ஈரலுக்கு வலுத்தரக் கூடியதாகவும் மணத்தக்காளி விளங்குகிறது.
மண்ணீரலுக்கும் இது மருந்தாகிறது. ஆன்டி பாக்டீரியல் குணம் காரணமாக நுண் கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டதாகவும் மணத்தக்காளி பயன் தருகிறது. நோய் கிருமிகளை எதிர்க்கும் தன்மை கொண்டதாக, நோய் கிருமிகள் வராமல் தடுக்கக் கூடியதாக மணத்தக்காளி வேலை செய்கிறது.
கல்லீரலை பலப்படுத்தக் கூடிய, குடற்புண்ணை ஆற்றக் கூடிய மருந்தை மணத்தக்காளியை பயன்படுத்தி தயார் செய்யலாம். இது உடலுக்கு குளிர்ச்சி தரக் கூடிய ஒரு உணவாகவும் அமையும்.
அவ்வப்போது மணத்தக்காளியை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மஞ்சள் காமாலை நோய் நம்மை அண்டுமோ என்ற அச்சம் இல்லாமல் இருக்கலாம். கல்லீரலுக்கு பலம் தருவதால் மஞ்சள் காமாலை வராமல் இது தடுக்கிறது. மஞ்சள் காமாலை தாக்கம் கொண்டவர்களும் இதை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மஞ்சள் காமாலை படிப்படியாக மறைந்து போக செய்கிறது. அதே போல் மணத்தக்காளி வற்றலை பயன்படுத்தி சளிக்கான மருந்தை தயார் செய்யலாம். இது சுவையின்மையை போக்கக் கூடியதாக, பசியை தூண்ட செய்வதற்கும் பயன்படுகிறது.
வாய்ப்புண் உள்ளவர்கள், மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண் மட்டுமின்றி, வயிற்றுப்புண்ணும் குணமாகும். ஏனெனில் வாய்ப்புண் உள்ளவர்களுக்கு வயிற்றுப்புண்ணும் இருக்கும்.
மலச்சிக்கலால் அவஸ்தைப்படுபவர்கள், மணத்தக்காளி கீரையை சாப்பிட்டால், இப்பிரச்சனையில் இருந்து விடுபடலாம். செரிமான பிரச்சனை உள்ளவர்கள், மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வந்தால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதுடன், செரிமான பிரச்சனையும் நீங்கிவிடும்.
சிலர் தினமும் சரியாக சிறுநீர் கழிக்கமாட்டார்கள். அத்தகையவர்கள் மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வந்தால், சிறுநீர் சீராக வெளியேறி சிறுநீரகத்தில் கோளாறு ஏற்படாமல் பாதுகாக்கலாம். முக்கியமாக ஆண்கள் மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வந்தால், அவர்களின் விந்தணு வலிமையுடன் இருக்கும்.