Thursday, March 17, 2016

மீனாட்சி அம்மன் கோயிலில் தவம் இருக்கும் நாரை: நிழற்குடை அமைத்து பக்தர்கள் வழிபாடு


மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரை குளத்தில் நாரை ஒன்று, நான்கு நாட்களாக நின்ற கோலத்தில் தவம் இருப்பதாக பக்தர்கள் பரவசமடைகின்றனர். திருவிளையாடல் புராணத்தில் சுவாமி சுந்தரேஸ்வரரிடம், வரம் பெற நாரை தவம் இருந்த காட்சியையே, இச்சம்பவமும் மெய்ப்பிப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.


பாண்டிய நாட்டின் தென் பகுதியில் இருந்த பெரியகுளத்தில் வாழ்ந்த மீன்களை உண்டு நாரை ஒன்று வாழ்ந்தது. வறட்சியால் குளம் வறண்டது. உணவு கிடைக்காமல் அலைந்த நாரை, ஒரு காட்டுக்குள் இருந்த குளத்திற்கு சென்றது. அங்கு முனிவர்கள் தவம் செய்து குளத்தில் நீராடினார்கள். அவர்கள் மீது மீன்கள் நீந்தியபடி சென்றதால், அவற்றை உண்பது பாவம் என நாரை கருதியது. உணவுக்கு என்ன செய்வது என்றும் யோசித்தது.அப்போது சத்தியன் என்ற முனிவர், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் புகழ் பற்றியும், அங்குள்ள பொற்றாமரை குளத்தின் பெருமை பற்றியும் சக முனிவர்களிடம் எடுத்து கூறினார். இதை கேட்ட நாரை, நேராக மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரை குளத்திற்கு வந்தது. அங்கிருந்த மீன்களையும் சாப்பிடுவதற்கும் மனமின்றி, கோயிலின் சுந்தர விமானத்தையே சுற்றிச்சுற்றிப் பறந்து கொண்டு இருந்தது. 

இதையறிந்த நாரை முன் தோன்றிய சுவாமி சுந்தரேஸ்வரர், ''பல நாட்களாக உணவு உண்ணாமல் விரதம் இருக்கிறாயே? உனக்கு என்ன வரம் வேண்டும்?'' என கேட்டார்.
நாரையோ, ''ஐயனே எங்கள் இனத்தவர்கள் மீன்களை உண்டு வாழும் சுபாவம் உள்ளவர்கள். இந்த புண்ணிய குளத்தில் இருக்கும் மீன்களை அறியாமல் கூட சாப்பிட்டு விடக்கூடாது. அப்படி சாப்பிட்டால் அது பாவம். அதை செய்யாமல் இருக்க இங்கு மீன்களே இல்லாத நிலையையும், எனக்கு சிவலோகம் தங்கும் பாக்கியத்தையும் தந்தருள வேண்டும்.'' என்றும் வேண்டிக் கொண்டது. அவ்வாறே சுந்தரேஸ்வரரும் நாரைக்கு முக்தி அளித்ததாக திருவிளையாடல் புராணம் கூறுகிறது.

இதன் அடிப்படையில், மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத் திருவிழாவின் போது, 'நாரைக்கு முக்தி அளிக்கும் லீலை,' ஆண்டு தோறும் நடக்கிறது.புராண காலத்து சம்பவத்தை மெய்ப்பிக்கும் விதமாக, மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரைக்குளத்தின் வடமேற்கு பகுதியில் நாரை ஒன்று கடந்த நான்கு நாட்களாக தவம் இருப்பதாக பக்தர்கள் பரவசமடைகின்றனர். கடும் வெயிலில் தவம் இருப்பது போல் நின்று கொண்டிருக்கும் நாரைக்கு உதவும் வகையில், அதன் அருகே பக்தர் ஒருவர் நிழற்குடை அமைத்து கொடுத்துள்ளார். நாரை அவ்வப்போது குளத்தில் நடந்து செல்வதும், பின் மீண்டும் நிழற்குடைக்கு வருவதுமாக உள்ளது. சுந்தரேஸ்வரரை நோக்கி நாரை தவம் செய்வதாக கருதும் பக்தர்கள் அக்காட்சியை பயபக்தியுடன் கண்டு வருகின்றனர்.