Tuesday, March 15, 2016

விமானம், கப்பல்களை கபளீகரம் செய்யும் பெர்முடா முக்கோணத்தின் மர்மம் விலகுகிறது?

Bermuda Triangle.svg
விமானங்கள், கப்பல்களை விழுங்கிய பெர்முடா முக்கோணம் பற்றிய மர்மம் நூற்றாண்டு காலமாக நீடிக்கிறது. செயற்கைகோள், நவீன ரேடார் கருவிகள் என நவீன தொழில்நுட்பத்தின் உச்சத்தில் இருந்தும், பெர்முடா முக்கோணத்தின் மர்மத்தை உடைக்க முடியாத நிலை இருந்து வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் அனுமானமாக கூற முடிந்தாலும், உண்மையான காரணத்தை கண்டறிய முடியாத நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில், பெர்முடா முக்கோணத்தில் விமானங்கள் மற்றும் கப்பல்கள் காணாமல் போவதற்கான புதிய காரணத்தை விஞ்ஞானிகள் கூறியிருக்கின்றனர். இதன்மூலம், பெர்முடா முக்கோணத்தின் பன்னெடுங்கால ரகசியங்கள் உடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


பெர்முடா முக்கோண பகுதி

 வட அட்லாண்டிக் கடல் பகுதியின் பெர்முடா, மியாமி[வடக்கு புளோரிடா] மற்றும் போர்டோ ரிகா தீவு பகுதிகளுக்கு இடையிலான முக்கோண வடிவிலான கடல் பகுதியை பெர்முடா முக்கோணம் என்று அழைக்கின்றனர். இது 5 லட்சம் சதுர மைல் பரப்பு கொண்ட அபாயகரமான பகுதி.

பிசாசு கடல்

 இந்த கடல் பகுதியை கடந்து செல்லும் விமானங்கள், கப்பல்கள் மர்மமான முறையில் காணாமல் போகின்றன. இதுவரையில் 40 கப்பல்களும், 20 விமானங்களும் இந்த பகுதியில் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளன. எனவே, இதனை சாத்தானின் முக்கோணம் என்று அழைக்கின்றனர்.

காந்த விசை

 இந்த பகுதியில் இருக்கும் அதீத காந்த விசை காரணமாக, விமானங்களும், கப்பல்களும் கவர்ந்து உள்ளிழுக்கப்படுவதாக இதுவரை கருதப்பட்டு வருகிறது. வேறு சிலர் அந்த பகுதியில் ஏற்படும் சூறாவளி காரணமாக கப்பல்கள் காணாமல் போவதாக கூறுகின்றனர். ஆனால், யாருமே ஊர்ஜிதமான முடிவுக்கு வர முடியவில்லை. அவ்வளவு மர்ம கடல் பிரதேசமாக இருக்கிறது பெர்முடா முக்கோணம்.

முதல் விபத்து 

வரலாற்றில் பெர்முடா முக்கோணத்தில் பதிவான முதல் விபத்து 1908ம் ஆண்டு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 1918ம் ஆண்டில் அமெரிக்காவுக்கு சொந்தமாக யுஎஸ்எஸ் சைக்கிளோப்ஸ் என்ற கப்பல் இந்த பகுதியில் காணாமல் போனது. இந்த கப்பலில் பயணித்த 306 பேரின் கதி என்ன என்று இன்றுவரை தெரியவில்லை. எவ்வித தடயமும் சிக்கவில்லை.

தொடர்கதை

 கடந்த 1950ல் இருந்து 1975ம் ஆண்டு வரை 428 கப்பல்களும், படகுகளும் இந்த பகுதியில் மாயமாகிவிட்டதாக ஒரு தகவல் கூறி, நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. 1945ம் ஆண்டில் பெர்முடா முக்கோண பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று மாயமானது. இந்த விமானத்தை தேடுவதற்கு அனுப்பப்பட்ட குழுவினர் சென்ற விமானமும் மாயமானது. இதுபோன்று, பெர்முடா முக்கோணத்தை ஆய்வு சென்ற குழுவினரின் கப்பலும் மாயமானது.

அமானுஷ்ய சக்தி 

இந்த பகுதியில் இருக்கும் அமானுஷ்ய சக்தியால்தான் விமானங்களும், கப்பல்களும் மூழ்குவதாக கருதப்படுகிறது. பெர்முடா முக்கோணத்தின் வழியாக சென்று கடந்த ஒரு சிலரும், அந்த பகுதியில் திடீர் ஒளிக்கற்றைகளை காண முடிந்ததாகவும், திசைக்காட்டி கருவிகள் செயல் இழுந்து போவதாகவும் கூறியிருக்கின்றனர். இது விஞ்ஞானிகளுக்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்துவதாக அமைந்ததே தவிர, உருப்படியான முடிவுக்கு வர முடியவில்லை.

இப்போதைய பரபரப்பு

 பெர்முடா முக்கோண கடல்பகுதியில் அடியில் ராட்சத பள்ளங்கள் இருப்பதாக நார்வே நாட்டை சேர்ந்த ஆர்க்டிக் பல்கலைகழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நார்வே நாட்டையொட்டிய, வட மத்திய பாரன்ட் கடல்பகுதியில் இந்த ராட்சத பள்ளங்கள் இருப்பதாகவும் கண்டறிந்துள்ளனர். சில பள்ளங்கள் 800 மீட்டர் நீளமும், 150 அடி ஆழமும் கொண்டதாக தெரிவிக்கின்றனர். 

காரணம் 

நார்வே நாட்டு கடலோர பகுதியில் அபரிமிதமான மீத்தேன் படிமங்கள் நிறைந்துள்ளன. இந்தநிலையில், பெர்முடா முக்கோண கடற்பகுதியில் இருக்கும் ராட்சத பள்ளங்கள் வழியாக அந்த மீத்தேன் வாயு கசிவு ஏற்படுவதாகவும், அந்த கசிவின்போது பள்ளங்களில் பெரிய வெடிப்புகள் ஏற்படுகின்றன. மேலும், கடல் நீரின் அடர்த்தியை குறைத்து கப்பல்கள் மிதக்க முடியாத நிலையை ஏற்பட செய்வதாகவும் கூறுகின்றனர். மேலும், இந்த பள்ளங்களிலிருந்து வெளிப்படும் மீத்தேன் வாயு காரணமாகவும், அபரிதமான வெப்பம் காரணமாகவும் அந்த பகுதியில் செல்லும் விமானங்களும், கப்பல்களும் விபத்தில் சிக்குவதாக தெரிவித்துள்ளனர்.


குழப்பம் 

அடுத்த மாதம் ஐரோப்பிய புவி அறிவியல் மாநாட்டில் இதுதொடர்பான ஆய்வு முடிவுகளை ஆர்க்டிக் பல்கலைகழக ஆய்வுக் குழுவினர் சமர்ப்பிக்க உள்ளனர். இந்த ராட்சத பள்ளங்களிலிருந்து வெளியேறும் மீத்தேன் வாயு காரணமாக கப்பல்கள் பாதிக்கப்படுவதை ஒப்புக்கொண்டாலும், விமானங்கள் மாயமாவது இன்னும் புதிராகவே கருதப்படுகிறது. இதுதொடர்பாக, விரிவான ஆய்வுகளும் தொடர்ந்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் ஏதாவது முடிவு எட்டப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.