Thursday, June 19, 2014

சிசேரியன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

இயல்பான பிரசவத்தில் கர்ப்பப்பை வாய் திறந்து குழந்தை வெளியே வருகிறது. அதில் சிக்கல் இருந்தால் சிசேரியன் (caesarean) கைகொடுக்கும். 
கர்ப்பிணியின் அடிவயிற்றைக் கீறி, கர்ப்பப்பையை கிழித்து, உள்ளேயிருக்கும் குழந்தையை வெளியே எடுப்பதுதான் சிசேரியன் முறை.

தாய், சேய் இருவரின் உயிரையும் காப்பாற்றுவதே இம்முறையின் அடிப்படை நோக்கம். தாயாகிற பெண்ணின் கூபக எலும்புக்கட்டு (Pelvic Structure) குறுகி இருந்தால் குழந்தை வரும் பாதையும் குறுகிவிடும். அதனால் இயல்பான வழியில் குழந்தை வெளிவருவது சாத்தியம் இல்லாது போகும். 

அந்நிலையில் சிசேரியன்தான் தீர்வாக அமையும். குழந்தையின் தலை பெரிதாகவும், தாயின் கூபக எலும்பு குறுகியும் இருந்தால் அப்போதும் சிசேரியன் சிபாரிசு செய்யப்படும். கர்ப்பப்பையின் அடிப்பாகத்தில் நஞ்சு இருந்தால் இயற்கைப் பிரசவத்தின்போது உதிரப்போக்கு அளவை மீறி – தாய், சேய் இருவரின் உயிருக்குமே ஆபத்தை உண்டாக்கலாம். 

அதனால் பிரச்சினைக்குத் தீர்வாக சிசேரியனைத்தான் நாடவேண்டி இருக்கும். பொதுவாக, பிரசவத்தின் போது குழந்தையின் தலைதான் முதலில் வெளியே வரும். சில அசாதாரண நிலைகளில் குழந்தையின் கால் முதலில் வெளிவரத் துவங்கும். 

அப்போதும் பிரசவத்தை நல்லவிதமாக செய்து வைக்கவே மருத்துவர்கள் முயல்வார்கள். குழந்தையின் எடை அதிகமாக இருந்தாலோ, உடல் கனமாக இருந்தாலோ, குழந்தைப் பிறப்புப் பாதையில் ஏதேனும் தடங்கல் ஏற்பட்டாலோ சுகப்பிரசவம் சாத்தியப்படாது. 

சிசேரியன் அவசியமாகிவிடும். பிரசவத்தின்போது குழந்தைக்கு எந்தவிதத்திலாவது மூச்சுத் திணறல் ஏற்படுமானால் உடனடியாக குழந்தையை வெளியே எடுக்க சிசேரியன்தான் வழியாக அமையும். சுகப்பிரசவம் சிக்கலாகிவிட அநேக காரணங்கள் உண்டு. 

கர்ப்பப்பையில் குழந்தை குறுக்காக இருத்தல், சாய்ந்து இருத்தல், நச்சுக்கொடி முதலில் வருதல், கை முதலில் வருதல் போன்றவை மட்டுமே சிறந்த வாய்ப்பாகும். சிலருக்கு வயிற்றிலேயே குழந்தைகள் இறந்து பிறந்திருக்கும். 

அத்தகையவர்களுக்கு முன்னதாகவே நாள் குறித்து சிசேரியன் செய்கிறார்கள். தாய்க்கு இரத்த அழுத்தம் அதிகமாயி, உடம்பு முழுவதும் வீங்கி இருந்தால் பிரசவத்தில் தாய்க்கு வலிப்பும், மயக்கமும் வரக்கூடும். அதனால் தாய், சேய் இருவர் உயிருக்கும் ஆபத்து நேரலாம். 

இதனைத் தடுக்க சிசேரியன் உதவும். கர்ப்பப்பை வாயில் புற்று நோய், அல்லது கர்ப்பப்பை அருகில் கட்டி இருந்தால் சிசேரியன்தான் உகந்தது. நீரிழிவு, இருதயநோய் உள்ள கர்ப்பிணிகளுக்கு சிசேரியனையே மருத்துவர்கள் சிபாரிசு செய்வார்கள். 

ஒருமுறை சிசேரியன் செய்துகொண்ட பெண் அடுத்த முறை சிசேரியன் மூலம்தான் குழந்தை பெறவேண்டும் என்பதில்லை. ஆனால் நீடித்த நோய் உபாதை உள்ளவர்களுக்கு இரண்டாவது முறையும் சிசேரியன் செய்யும்படி இருக்கும். இப்போதெல்லாம் மருத்துவர்கள் யாருக்கு சிசேரியன் தேவை என்பதை முன்கூட்டியே ஸ்கேன் மூலம் கண்டறிந்து சொல்லிவிடுகிறார்கள். 

* சிசேரியன் செய்து கொண்ட தாய் குறைந்தது ஒன்றரை மாதம் ஓய்வில் இருக்க வேண்டும். அதன் பிறகு வீட்டிலும், அலுவலகத்திலும் வழக்கமாக செய்கிற வேலைகளை தொடரலாம். 

* சிசேரியனுக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் கருவுறாமல் இருப்பது நல்லது. 

* ஒரு தாய்க்கு மூன்று முறைக்கு மேல் சிசேரியன் செய்வதில்லை.