Skip to main content

துன்பம் போக்கும் தான்தோன்றீசுவரர் திருக்கோயில்

பாலாறு பாய்ந்து வளப்படுத்தும் தொண்டை நாட்டில் வழிபாடு சிறப்புமிக்க பல திருக்கோயில்கள் அமைந்துள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில், மதுராந்தகம் வட்டத்தில், பெரும்பேர் கண்டிகை கிராமம் கோயில் நகரமாக விளங்குகிறது. அச்சரப்பாக்கம் அருகே அமைந்துள்ள இவ்வூரில் பல திருக்கோயில்கள் அமைந்து மக்களால் போற்றி வணங்கப்படுகின்றன.


இவ்வூரின் வடமேற்கில் உள்ள ஏரியின் அருகே வழிபாடு சிறப்புமிக்க தான்தோன்றீசுவர சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இறைவன் சுயம்பு வடிவமாக மணலால் ஆன லிங்கமாக இருப்பதால் கவசம் அணிவிக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. அம்பாள் தடுத்தாட்கொண்ட நாயகி என்ற பெயருடன் அங்குசம் - பாசம் தாங்கியும், கீழிரு கரங்களில் அபய - வரத முத்திரை தாங்கி கருணையோடு அருள்புரியும் அற்புதக் கோலம் கொண்டு விளங்குகிறாள்.


கருவறை, அர்த்தமண்டபம், முன்மண்டப அமைப்புகள் உடையதாக கோயில் விளங்குகிறது. முன் மண்டபத்தில் விநாயகர், முருகன், அம்பாள், பைரவர் எழுந்தருளியுள்ளனர். இறைவன் கிழக்கு நோக்கியிருந்தாலும் நுழைவு வாயில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. நுழைவு வாயில் நிலைக்கால் அழகிய சிற்ப வேலைப்பாடு உடையதும், கீழ்பகுதியில் இரு ரிஷபங்கள் காணப்படுவதும் சிறப்பு. நுழைவு வாயில் அருகே சுவரில் கண்ணப்ப நாயனாரின் சிற்பம் சிறிய வடிவில் அரிய கலை படைப்பாய் விளங்குகிறது.


இக்கோயிலில் வரலாற்றுச் சிறப்புமிக்க கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவன் பெரும்பேறூர் ஆளுடையார் ஸ்ரீகரணீசுவரமுடையார், திருத்தான்தோன்றீ மகா ஸ்ரீ கரண ஈசுவரமுடையார் எனக் கல்வெட்டுகளில் குறிக்கப்படுவதைக் காணலாம். மேலும் இவ்வூர் தனியூர் மதுராந்தகச் சதுர்வேதிமங்கலத்தின் தென்பிடாகை பெரும்பேறூர் எனவும், திரிபுவனநல்லூர் எனவும் பெயரிட்டு அழைக்கப்பட்டதையும் அறிய முடிகிறது. சிவாலயங்களுக்கு அளிக்கப்படும் தானங்களைக் கண்காணிப்பவராக சண்டிகேசர் விளங்குகிறார். அதனை சண்டேசுவரன் ஓலை என்பர். அதனைக் குறிக்கும் கல்வெட்டும் இக்கோயிலில் காணப்படுவது சிறப்பாகும். குலோத்துங்கசோழன் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயிலுக்கு பிற்காலச் சோழ மன்னர்களும் தானம் அளித்து பெருந்தொண்டு செய்துள்ளனர்.


இத்தகைய சிறப்புவாய்ந்த இத்திருக்கோயிலில் வடமேற்கில் மகிடன் தலைமேல் நின்றவண்ணம் காட்சி தரும் துர்க்கையின் திருமேனி மக்களால் சிறப்புடன் வழிபடப் பெறுகிறது. புடைப்பு சிற்பமாக விளங்கும் இத் திருமேனியில் அம்பிகை எட்டு கரங்களுடன் ஆயுதங்கள் தாங்கி காட்சி அளிக்கிறார். இங்கு அம்பிகையின் வாகனமாக மான் அமைந்துள்ளது மேலும் தனிச்சிறப்பு. பல்லவர்கால கலை அம்சத்துடன் திருமேனி விளங்குகிறது.


கோயிலின் முன்பாக நந்தி மண்டபமும், பலிபீடமும் உள்ளன. பிரதோஷ வேளையின்போது நந்தியெம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்படுகிறது. மேலும் அருகில் தென்புறத்தில் உள்ள மண்டபத்தில் தேவி - காளி - பிடாரியாக எழுந்தருளி காட்சி தருகிறாள். சண்டன், முண்டன் அசுரர்களை எட்டு கரங்களுடன் வதம் செய்யும் சாமுண்டியாக - ரணபத்ரகாளி என்ற பெயருடன் விளங்குகிறாள். மக்கள் தங்களுக்கு ஏற்படும் அனைத்து விதமான துன்பங்கள் நீங்க இத்தேவியை சிறப்பாகப் போற்றி வழிபடுகின்றனர். இத்தேவிக்காக மண்டபத்தின் அருகிலேயே வடக்கு நோக்கி புதிய சந்நிதி கட்டும் பணி நடைபெற்று வருகிறது. காளிதேவியின் அருகில் பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில், மாந்தி வழிபடும் கோலத்தில், காக்கைக் கொடியுடன் காட்சி அளிக்கும் ஜேஷ்டா தேவியையும் கண்டு வழிபடலாம்.




கோயிலின் எதிரில் வடக்கில் பழமையான தலவிருட்சமாக ஆத்தி மரமும், அதன் கீழே சிவலிங்கமும், நான்கு நந்திகளும் காட்சி தருகின்றன. அகத்தியர் சந்நிதி என இதனை அழைக்கின்றனர். சித்ரா பௌர்ணமி நாளில் அகத்தியர் இங்கு எழுந்தருளுகிறார். சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.


இக்கோயிலில் காளிதேவி, சண்டிகேசுவரர் சந்நிதிகளில் திருப்பணி முடிவடையாமல் உள்ளன. மேலும் திருப்பணிகள் செய்ய வேண்டியது அவசியமாக உள்ளன. அண்மையில் சென்னையைச் சேர்ந்த அண்ணாமலையார் அறப்பணி குழுவினர் இக்கோயிலிலும், இவ்வூரில் உள்ள கைலாசநாதர் கோயிலிலும் உழவாரப் பணி மேற்கொண்டனர். திருக்கோயிலுக்குச் செல்லும் பாதையும் சீரமைக்க வேண்டியுள்ளது. வழிபாடு சிறப்புமிக்க தான்தோறீசுவரர் திருக்கோயில் திருப்பணியில் நாமும் பங்குகொண்டு நற்பலன்களை அடைவோம்!

Popular posts from this blog

அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்

கோயில் அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில் கோயில் வகை நட்சத்திர கோயில் மூலவர் சித்திரரத வல்லபபெருமாள்

களாக்காய் சிறப்பான மருத்துவ பயன்

“எப்போதோ கிடைக்கும் பலாக்காயை இப்போது கிடைக்கும் களாக்காய் மேல்” என்று ஒரு பழமொழி உண்டு. அந்தளவிற்கு சிறப்பான மருத்துவ பயன்களை கொண்டது களாக்காய். இந்த தாவரமானது காரைச் செடிபோன்று மலைகளில் தன்னிச்சையாக புதர் போல் வளரும். தோட்டங்களிலும் வளர்க்கப்படும். இது இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது.