Thursday, May 15, 2014

முடி உதிர்வதை தடுக்க எளிய முறைகள்

வாரம் ஒருமுறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாதகாலம் செய்து வந்தால், எந்த காரணத்தால் முடி கொட்டினாலும் நின்றுவிடும். அதோடு, இக்கீரை நரை விழுவதையும் தடுக்கும். முடியும் கருகருவென வளரும்.

இரவில் நெல்லிக்காய்களை தண்ணீரில் ஊறப்போட்டு, காலையில் அந்நீரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். செம்பட்டை முடியும் நிறம் மாறும்.


தலைமுடி நன்றாக வளர கற்றாழைச் சாறில் எண்ணெய் கலந்து தலையில் தேய்க்கலாம். இப்படி செய்து வந்தால் முடி உதிராது, அடர்த்தியாகவும் வளரும். தலையும் குளிர்ச்சியாக இருக்கும்.


பெரும்பாலானவர்களுக்கு சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறது. சிலருக்கு வம்சா வளியாகவும் நரை வருவதுண்டு. கவலை, மனச்சோர்வு, டீ, காபி அதிகம் குடித்தல் போன்றவற்றால் பித்த நரை உண்டாகும். வைட்டமின் பி12 நரையை போக்கவல்லது.


மருதாணி இலையை நன்கு மைபோல் அரைத்து, அதில் எலுமிச்சம் பழச்சாறையும், வெந்தயம் பவுடர் இரண்டு ஸ்பூன் கலந்து கொள்ள வேண்டும். இக்கலவையை முதல் நாள் இரவே செய்து கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும், இக்கலவையை அனைத்து முடிகளிலும் படும்படி நன்றாக தேய்த்து இரண்டு அல்லது மூன்று மணிநேரம் ஊறவைத்து பிறகு சிகைக்காய்த்தூள் தேய்த்து நல்ல தண்ணீரில் கழுவ வேண்டும். குறிப்பாக மருதாணியை போடுவதற்கு முன், தலையில் எண்ணெய் பசை இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.


கறிவேப்பிலையை ஒருநாள் விட்டு ஒருநாள் துவையல் அரைத்து சாப்பிட வேண்டும். காபி, டீ குடிக்கும் பழக்கம் இருந்தால், படிப்படியாக குறைத்து அறவே நிறுத்தி விடவேண்டும்.சுத்தமான தேங்காய் எண்ணெய்யில் கறி வேப்பிலைத் துளிர் சேர்த்து கொதிக்க வைத்து கூந்தலில் தடவிக் கொள்ளுங்கள்.


ஒவ்வொரு முறை எண்ணெய் தடவும்போதும் மண்டை ஓட்டுப் பகுதித் தோலை (Scalp) விரல் நுனியால் மசாஜ் செய்யத் தவறாதீர்கள்.


ஷாம்பூ, சோப்பு வகைகளுக்கு `டாட்டா' சொல்லுங்கள். அதற்குப் பதில் சிகைக்காய், அரப்பு, பாசிப்பருப்பு மாவு போன்ற இயற்கையானவற்றைத் தேர்ந்தெடுங்கள்.


வெந்தயத்தை ஒரு நாள் இரவு ஊறவைத்து, மறுநாள் அதனை நன்கு அரைத்து கூந்தலில் பூசுங்கள். கூந்தல் மென்மையாகவும் அழகாகவும் மாறும். 


முட்டையின் வெள்ளை கரு மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து கூந்தலில் தடவினால் பொடுகு தொல்லை நீங்கி கூந்தல் பிரகாசிக்கும்.


ஐந்து இதழ்கள் உள்ள செம்பருத்தி / செம்பரத்தை பூவை அரைத்து நல்லெண்ணையில் காய்ச்சி, வடிகட்டிய பின் தலைக்குத் தேய்த்தால் தலை முடி அடர்த்தியாக வளரும். 

கடுக்காய், செவ்வரத்தம் பூ, நெல்லிக்காய் ஆகியவைகளை சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் காச்சி கூந்தலில் தடவினால் முடி நன்றாக வளரும். 

உணவில் கீரை, முளைக்கட்டிய பயறு வகைகள், உலர் திராட்சை, பேரீட்சை போன்றவைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.


ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத் துணியில், அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில், தேய்த்து வந்தால், முடி கருமையாகும்,அத்துடன் தலை முடி அடர்த்தியாக வளரும். 


மருதாணி, செம்பருத்தி, கருவேப்பிலை, வேப்பிலை, ரோஜா இதழ்கள் இவற்றை நன்கு நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்து கொண்டு காய்ச்சிய தேங்காய் எண்ணையில் கலந்து ஊறவிட்டு பின்பு தலைக்கு தேய்க்கவும். இப்படி செய்தால் தலைமுடி உதிர்வது குறையும். எப்பொழுதுமே ஒரு செய்முறை செய்தால் அதை தொடர்ந்து செய்யவேண்டும். மாற்றிக் கொண்டே இருந்தால் முடி உதிர்வதை தடுக்க முடியாது. ஷாம்புக்கள் பயன்படுத்தும் போதும் இதே போல் செய்ய வேண்டும்.அடிக்கடி ஷாம்புக்களை மாற்றினால் முடி உதிரும். 


இரவில் பால் குடிப்பதை மறக்க வேண்டாம்.


கூந்தலில் அழுக்கு, சிக்கு சேராமல் பார்த்துக் கொள்ளுங்கள். 


எப்போதும் சுத்தமான நீரிலேயே கூந்தலை கழுவ வேண்டியது அவசியம். குளிர்ந்த அல்லது இளம் சூடான தண்ணீரையே பயன்படுத்துங்கள்.


டென்ஷனைக் குறையுங்கள். மகிழ்வோடு இருங்கள். அகத்தின் மகிழ்ச்சி முகத்தில் மட்டுமல்ல முடியிலும் தெரியும்.


வாசனைத் திரவியங்கள், ஹேர் ஸ்பிரே போன்றவைகளைத் தவிருங்கள்.