சிவபெருமான் லிங்க திருமேனியாக காட்சிதந்து அருளாசி வழங்கும் ஆலயங்கள் தமிழ்நாட்டில் ஏராளமாக உள்ளன. அவை ஒவ்வொன்றும் மூர்த்தி மகிமையாலும், தலம், தீர்த்தம் சிறப்பாலும் மேன்மையுற்று விளங்குகின்றன.
‘‘சோழ வள நாடு சோறுடைத்து’’ என்பது ஆன்றோர் வாக்கு. இங்கு நாயன்மார்களால் பாடல் பெற்ற சிவாலயங்கள் நிறைய உண்டு.
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரை தலங்களில் 23–வது தலமாக விளங்குவது திருவேள்விக்குடி. இறைவன் பெயர் கல்யாணசுந்தரேஸ்வரர். மணவாளேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். அம்மன் பெயர் பரிமள சுகந்த நாயகி.
2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்திருக்கோவில் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் குத்தாலத்தில் இருந்து சுமார் 5 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. சமயக்குரவர்களான திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற தலம்.
திருமணத்தடை நீக்கும் திருத்தலமாக விளங்கும் திருவேள்விக்குடியில் விரைவில் திருமணம் நடக்க வேண்டுவோர் இங்குவந்து சிவனையும், அம்மனையும் தரிசனம் செய்து பலன் அடைகின்றனர்.
தலவரலாறு
திருவேள்விக்குடியின் அருகில் உள்ள குத்தாலத்தில் பார்வதி தேவி பரத மகரிஷியின் மகளாக பிறந்தாள். அவள் பரமேஸ்வரனையே கணவனாக அடையவேண்டி 16 திங்கட்கிழமை விரதம் இருந்து மண்ணால் லிங்கம் பிடித்து பூஜை செய்தாள். 17–வது திங்களில் சிவபெருமான் மணவாளேஸ்வரர் ஆக தோன்றி அவளை திருமணம் செய்து கொள்வதாக வரமளித்தார்.
அதன்படி திருவிழிமிழலையில் சிவன்–பார்வதி திருமண வைபோகத்துக்காக ‘பரிசம்’ போடப்பட்டது. திருவேள்விக்குடியில் அம்மனுக்கு கங்கணம் கட்டி வேள்விகள் செய்து பிரம்மா திருமண சடங்குகள் செய்ய மகா விஷ்ணு அட்சதை தூவ, சிவபெருமான் பார்வதிதேவியை மணம்புரிந்து கொண்டார். எனவே தான் இத்தலம் திருவேள்விக்குடி என்று அழைக்கப்பட்டது.
தொடர்ந்து மணமக்கள் வெளியில் வந்து நலுங்கு (பந்து) உருட்டி விளையாடினார்கள். இதனால் அந்த இடம் பந்தநல்லூர் என்றழைக்கப்பட்டது. பிறகு இறைவனும், இறைவியும் தம்பதி சமேதரராக தேவர்களுக்கு காட்சியளித்த இடம் திருமணஞ்சேரி ஆகும்.
திருவேள்விக்குடியில் பார்வதியை திருமணம் செய்து கொண்ட பரமேஸ்வரன் அவருக்கு தனது உடலின் வலது பாகத்தை கொடுத்தருளினார். திருமணக்கோலத்தை காண வானுலகில் இருந்து ரிஷிகள் அனைவரும் திருவேள்விக்குடியில் கூடியதால் இங்கு கொடி மரம் கிடையாது.
நவக்கிரகங்கள் பூஜை செய்து வழிபட்டதால் கோவிலில் நவக்கிரகங்கள் கிடையாது. அதற்கு பதில் ஈசனே ஈசான்ய மூலையில் அமர்ந்துள்ளார். நவக்கிரக தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து அகல் விளக்கு ஏற்றி வழிபட தோஷம் நீங்கி நலமடைவர்.
திருமணத்தடை உள்ளவர்கள் பவுர்ணமி அன்று கோவிலில் நடைபெறும் யாகத்தில் கலந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுயம்வர பார்வதி ஹோமம், பூர்வஜென்ம பாவம் நீங்க ஹோமம், தன்வந்திரி ஹோமம் போன்றவை நடைபெற்று பூர்ணாகுதி நடைபெறும்.
பின்னர் அவரவர் பெயர் நட்சத்திரத்திற்கு சுவாமிக்கு அர்ச்சனை செய்து அபிஷேகம் நடைபெறும். பின்னர் அவர்கள் கையில் கங்கணம் (ரட்சா பந்தனம்) கட்டப்படுகிறது. இவ்வாறு செய்வதால் அவர்கள் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடை பெறும் என்பது ஐதீகம்.
இதுகுறித்து கோவில் அர்ச்சகர் வைத்தியநாதன் கூறும்போது, ‘திருமணம் தள்ளிபோகிறவர்கள் இங்கு பவுர்ணமி அன்று வந்து யாகத்தில் கலந்து கொள்ளலாம். அல்லது தனியாகவும் வந்து யாக பூஜை செய்யலாம். இவ்வாறு செய்பவர்களுக்கு இறைவனருளால் 48 நாட்களுக்குள் திருமணம் நடைபெற்று விடும். திருமணம் முடிந்தவுடன் தம்பதிகள் கோவிலுக்கு வந்து சுவாமி அம்பாளுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். இது பக்தர்கள் அனுபவப்பூர்வமாக கண்டறிந்த உண்மை’, என்றார்.
திருமணத்துக்கு உதவிய மகேஸ்வரர்
அரசகுமாரனுக்கு ஒரு பெண்ணை திருமணம் செய்ய நிச்சயித்து இருந்தனர். பெண்ணின் தாய், தந்தையர் திருமணத்திற்கு முன் திடீரென்று இறந்து விட்டனர். இதனால் பெண் வீட்டில் இந்த திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை.
அரசகுமாரன் இக்கோவிலுக்கு வந்து இறைவனை வணங்கி தனது மனக்குறையை வெளியிட்டார். சிவபெருமான் ஒரு பூதத்தை அனுப்பி அந்த பெண்ணை அழைத்து வந்து ராஜகுமாரனுக்கு திருமணம் செய்து வைத்தார்.
இத்தல இறைவன் கிழக்கு நோக்கி சுயம்புலிங்கமாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
தவக்கோலத்தில் அகத்தியர்
அகத்திய மாமுனிவர் இக்கோவிலில் தவக்கோலத்தில் வீற்றிருக்கிறார். வாதாபி என்ற அரக்கனை கொன்ற பாவம் தீர இறைவனை நோக்கி தவம் இருக்கும் நிலையில் அகத்தியர் சிற்பம் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்.நா.மோகன்தாஸ், தஞ்சாவூர்.
தொழுநோய் போக்கும் அக்னி தீர்த்தம்
நாயன்மார்களில் ஒருவரான சுந்தரருக்கு பூர்வ ஜென்ம பாவம் காரணமாக உடலில் தொழுநோய் ஏற்பட்டது. இதனால் சிதம்பரம் சென்று நடராஜரிடம் முறையிட்டார். பின்னர் அவர் திருத்துருத்தி சென்று பரமேஸ்வரனை பாடினார்.
அப்போது சிவபெருமான், ‘காவிரி வட கரையில் உள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி மணவாளனை பாடு’ என்று சொன்னார். சுந்தரரும் அவ்வாறே செய்யவும் அவரது தொழுநோய் மறைந்தது.
உடனே அவர் இவ்வாறு பாடினார்...
‘மூப்பதும் இல்லை பிறப்பதும் இல்லை இறப்பதில்லை சேர்ப்பது
காட்டாகக்தூரினும் அகச்சிந்திக்கினல்லால் காப்பது
வேள்விக்குடி தண்துருத்தி எங்கோன் அரைமேல்
ஆர்ப்பது நாகம் அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே’.
ஆலயத்திற்கு செல்வது எப்படி?
திருவேள்விக்குடி கல்யாணசுந்தரேஸ்வரர் கோவில் நாகை மாவட்டம் குத்தாலத்தில் இருந்து 5 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. குத்தாலத்தில் இருந்து பஸ் மற்றும் ஆட்டோ வசதி உண்டு. பஸ்–ரெயிலில் வருபவர்கள் மயிலாடுதுறை, கும்பகோணம் வந்து அங்கிருந்து கோவிலுக்கு செல்லலாம்.
காலை 6 மணி முதல் 12 மணிவரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணிவரை நடை திறந்து இருக்கும்.