கர்ப்பமாக இருக்கும் போது வயிறு மட்டும் வீங்கினால் பரவாயில்லை. ஆனால் கைகளும், கால்களும் வீக்கமடையும். குறிப்பாக கர்ப்பத்தின்
இறுதி மூன்று மாதத்தில் தான், இத்தகைய வீக்கங்கள் ஏற்படும். அதிலும் கால் வீக்கம் தான் அதிகம் ஏற்படும். இவ்வாறு கைகள் மற்றும் கால்கள் வீக்கமடைவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.
உடலில் நீர்ச்சத்து தேங்கியிருப்பது மற்றும் அதிகப்படியான இரத்த ஓட்டம் ஒரே இடத்தில் இருப்பது. இவ்வாறு ஏற்படும் வீக்கங்கள் சில நேரங்கள் வலியுடன் இருக்கும். இப்போது அந்த வீக்கங்களை இயற்கை முறையில் குறைப்பதற்கான சில எளிய வழிகளை பார்க்கலாம்..
எங்கும் செல்லாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டே இருந்தால், வீக்கங்கள் தான் அதிகமாகும். எனவே எப்போதும் தசைகளுக்கு அசைவைக் கொடுக்க வேண்டும். அதற்கு தினமும் நடைப்பயிற்சி அல்லது மருத்துவரின் அனுமதியுடன் சில உடற்பயிற்சிகளை செய்யலாம்.
இதனால் ஒரே இடத்தில் தண்ணீர் தேங்கியிருப்பதை தடுக்க முடியும். நீச்சல் செய்வதால், உடலின் அதிகப்படியான எடை தெரியாமல் இருப்பதோடு, வீக்கமும் குறையும். இல்லாவிட்டால், ஒரு பெரிய டப்பில் வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி, அதில் உட்கார்ந்தாலும், வீக்கம் குறையும். குறிப்பாக, நீர் சூடாக இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் சூடான தண்ணீர் கர்ப்பிணிகளுக்கு நல்லதல்ல.
அலுவலகத்தில் நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்தாலும், பாதங்களில் வீக்கம் ஏற்படும். எனவே பாதங்களை தொங்க விடாமல், மேலே வைப்பதற்கு, ஒரு சிறிய நாற்காலியை பயன்படுத்தவும்.
கர்ப்பிணிகளுக்கு இடது பக்கம் படுப்பதே மிகவும் வசதியாக இருக்கும். ஏனெனில், இவ்வாறு படுப்பதால், இரத்த ஓட்டமானது சீராக இருக்கும். எனவே எப்போதும் படுக்கும் போது இடது பக்கம் திரும்பி படுக்கவும்.
கர்ப்பத்தின் போது, உணவில் உப்பின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும். இதனால் உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கலாம். கர்ப்பமாக இருக்கும் போது அதிகமான அளவில் தண்ணீர் குடித்தால், உடலில் தங்கியுள்ள நச்சுக்கள் வெளியேறி, உடல் வீக்கத்தை குறைக்கும். அதிலும் குறைந்தது ஒரு நாளைக்கு 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
ஆடைகள் இறுக்கமாக அணியும் போது, அழுத்தமானது ஒரே இடத்தில் அதிக நேரம் இருப்பதால், அவை வீக்கங்களை ஏற்படுத்தும். எனவே தளர்வான ஆடைகளை அணிய வேண்டும்.
ஜங்க் உணவுகளில், உப்பு அதிகமாகவும், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து குறைவாகவும் இருக்கும். எனவே இத்தகைய உணவுகளை கர்ப்பத்தின் போது அறவே தவிர்க்க வேண்டும்.
காபி அதிகம் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை உடலில் நீர் வறட்சியை ஏற்படுத்துவதோடு, வீக்கத்தையும் ஏற்படுத்தும். நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தால், அழுத்தமானது கால்களில் அதிகம் இருப்பதால், அவை கால்களில் வலியுடன், வீக்கத்தையும் ஏற்படுத்தும்.