Saturday, May 31, 2014

உடல் நாற்றத்தை தடுப்பது எப்படி

வெயில் காலங்களில் நமது உடலில் இருந்து அதிக வியர்வை வெளியேறும். அதனால் துர்நாற்றம் வீச தொடங்கும். நம் அருகில் வருபவர்களை முகம்
சுளிக்க வைத்து தர்மசங்கடத்தை ஏற்படுத்தி விடும். உடல் துர்நாற்றத்தை தடுக்க இந்த வழிமுறைகளை பின்பற்றி பயன் அடையலாம்.

* வெதுவெதுப்பான தண்ணீரில் தினம் இரு வேளைகள் கட்டாயம் குளிக்க வேண்டும். 

* தண்ணீரில் வேப்பிலையை கசக்கிச் சேர்த்து தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்துக் குளிக்கலாம். 

* தினம் இருமுறை டியோடரன்ட் உபயோகிக்கலாம். குளித்து முடித்ததும், உடலைத் துடைத்து விட்டு, வியர்க்க  ஆரம்பிக்கும் முன்பே இதை உபயோகிக்க வேண்டும். 

* கேஸ் இல்லாத டியோடரன்ட் நல்லது. அதை உபயோகிக்கும் போது எரிச்சலோ, குத்தலோ  இருந்தால் உபயோகிக்க வேண்டாம்.

* உடைகளை வைக்கும் பீரோ மற்றும் அலமாரிகளையும் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். ஒருமுறை உபயோகித்த  உடையை, பிறகு துவைத்துக் கொள்ளலாம் என மற்ற துணிகளோடு சேர்த்து வைக்கக் கூடாது. அதிலுள்ள கிருமிகளும் நாற்றமும் மற்ற உடைகளுக்கும் பரவும். 

* நமது உணவுப்பழக்கம்கூட ஒருவரின் உடல் நாற்றத்துக்குக் காரணமாகலாம். பூண்டு, சில வகை அசைவ உணவுகள், அதிக மசாலா சேர்த்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.

 * உடல் துர்நாற்றத்தைப் போக்க பச்சைக் காய்கறிகள், கீரைகள் சாப்பிட வேண்டும். வெட்டிவேரை குளிக்கும் தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்துக் குளித்தாலும் உடல் மணக்கும். 

* பட்டைத்தூள் 2 டீஸ்பூன், அரை மூடி எலுமிச்சைப் பழம் இரண்டையும் குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்தால், நாற்றத்தை தடுக்கலாம்.