"மெனோபாஸ்' கடந்த பெண்களா நீங்கள்...:
"அந்த' மூன்று நாட்கள், சில பெண்களுக்கு தொல்லையாக இருக்கும். நாற்பது வயதை கடந்த பின், அந்த பிரச்னையால், பாதிப்பு அதிகமாகி, புதிய தொல்லைகள் ஏற்படுகின்றன. எனவே, நாற்பது வயதைத் தாண்டிய அனைத்து பெண்களும், "மெனோபாஸ்' தன்மைகளைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியம்.
இந்த காலங்களில், உடல் கொதிப்பு, இரவில் வியர்வை, மர்ம உறுப்பு வறட்சி, எரிச்சல், அரிப்பு, உடலுறவின் போது வேதனை, சிறுநீரை அடக்கி வைக்க முடியாமை, நினைவாற்றல் குறைதல், கவனக்குறைவு முதலிய அறிகுறிகள் தோன்றுகின்றன.
அண்மையில், மும்பையில் நடத்திய ஆய்வில், படித்த பெண்களில் 30 சதவீத்தினரே, மாதவிலக்கு நிற்பது குறித்து அறிந்து வைத்திருக்கின்றனர். இவர்களும் கூட, "மெனோபாஸ்' என்ற சொல்லை மட்டுமே தெரிந்து வைத்திருக்கின்றனரே தவிர, அதைப் பற்றிய விவரங்களை அறிந்திருக்கவில்லை.
இந்த ஆய்வு கூறும் மற்றொரு தகவல், 40 வயதான, 15 சதவீதப் பெண்களுக்கு, எந்த நிமிடத்தில் வேண்டுமானாலும், மாத விலக்கு நின்று போகலாம். மாதவிலக்கு நிற்கும்போது, மனதளவிலும் நிறைய மாற்றங்கள் ஏற்படுகின்றன. சினைப்பைகள், கருமுட்டைகளை பக்குவம் செய்வதை நிறுத்தும் போது, மாதவிடாய் நின்று விடுகிறது. இதற்கு அடிப்படையான காரணம், "ஈஸ்டிரோஜன்' என்ற சுரப்பு நின்று விடுவது தான். கர்ப்பப்பை அகற்றப்பட்ட பெண்களுக்கும், மாதவிலக்கு நின்று போகும்.
மருத்துவ வளர்ச்சியின் காரணமாக, பெண்களின் வாழ்நாள் அதிகரித்து, இன்று 80 வயது வரை வாழ்கின்றனர். ஐம்பது வயதிலும், இளமையோடு இருக்கின்றனர். எனவே, நாற்பது வயதில், வீட்டு விலக்கு நின்றாலும், ஐம்பது வயதைத் தாண்டிய பின்பே முழுமையாக நின்று போகிறது.
"ஈஸ்டிரோஜன்' பற்றாக்குறையால் தோலிலும், இதய நாளங்களிலும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. தோலுக்கு மினுமினுப்பையும், மிருதுத் தன்மையும் கொடுக்கும், "கொலேஜன்' என்ற புரதம் சார்ந்த நார்ப் பொருள் குறைந்து விடுவதால், தோலில் வறட்சியும், சுருக்கங்களும் ஏற்படுகின்றன.
மருத்துவர்களின் ஆலோசனையுடன் முறையான மருந்துகளை உட்கொண்டால், உடலின்ப செயல்பாடுகளை மீண்டும் பெற முடிவதோடு, சிறுநீரை கட்டுப்பாட்டில் வைக்கவும், சிறுநீர், பாலியல் உறுப்புகளின் முதுமை அறிகுறிகளை குறைக்கவும் முடியும்.
மாதவிலக்கு நின்று போன பெண்கள், தங்களுக்கு ஏற்படும் தொல்லைகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள, இதோ சில யோசனைகள்...
* காபி, தேநீர் அருந்துவதைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
* குளிர்ந்த நீரை அதிகமாகக் குடியுங்கள்.
* காற்றோட்டமான இடங்களில் வசிப்பது அவசியம்.
* உடல் கொதிப்பு ஏற்படும்போது, மன இறுக்கமின்றி அதனை எதிர்கொள்ளுங்கள்.
* யோகா மற்றும் தியானப் பயிற்சி மேற்கொள்வதுடன், மெல்லிய பருத்தி ஆடைகளை அணியுங்கள்.
* இரவில் உறக்கத்தை கெடுக்கும் அளவிற்கு உடல் கொதிப்பு இருக்குமாயின், பகலில் போதுமான ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது.
* படுக்கை விரிப்பை, உடல் நிலைக்கு தக்கபடி பயன்படுத்துங்கள்.
* உடல்சூட்டைத் தணித்துக்கொள்ள ஈரத்துணிகளால், உடலைத் துடைத்துக் கொள்ளலாம்.
* இரவில் தளர்வான பருத்தி ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள்.
* படுக்கை அறையை சுத்தமாகவும், காற்றோட்டத்துடனும் அமைத்துக் கொள்ளுங்கள்.