மஞ்சள் மற்றும் கடலை மாவு ஃபேஸ் பேக்
இந்தியப் பெண்களின் அழகின் இரகசியத்திற்கு மஞ்சள் மற்றும் கடலை மாவு முக்கியமானது. அதிலும் திருமண நாளன்று அனைத்து மணப்பெண்களுக்கும் சடங்கின் போது மஞ்சள் மற்றும் கடலை மாவின் கலவையை வைத்து தேய்த்துவிடுவர். இதனால் இந்த கலவை சருமத்திற்கு சற்று பொலிவைத் தருவதோடு, நிறத்தையும் சற்று அதிகரிக்கிறது.
கடலை மாவு மற்றும் பால் ஃபேஸ் பேக்
இந்த வகையான ஃபேஸ் பேக்கிற்கு 1/2 கப் பாலுடன் கடலை மாவை சேர்த்து, சற்று கெட்டியான பேஸ்ட் போல் செய்து கொள்ள வேண்டும். வேண்டுமென்றால் இந்த கலவையின் போது சிறிது தேனை சேர்த்து, முகத்தில் தடவி, ஊற வைத்து கழுவி வந்தால், சருமத்தில் வறட்சி ஏற்படாமல் இருக்கும்.
கடலை மாவுடன் எலுமிச்சை மற்றும் பாதாம்
இந்த மாதிரியான ஃபேஸ் பேக்கில் அதிகமான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் ஈ சத்துக்கள் உள்ளன. இதற்கு பாதாமை இரவில் படுக்கும் முன் ஊற வைத்து, பின் காலையில் அதனை நன்கு அரைத்து பேஸ்ட் போல் செய்து, எலுமிச்சை சாற்றை விட்டு, ஒரு டீஸ்பூன் கடலை மாவை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, ஊற வைத்து பின் கழுவிட வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும கரும்புள்ளிகள் நீங்கி, முகம் நன்கு பளிச்சென்று காணப்படும்.
முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் கடலை மாவு ஃபேஸ் பேக்
முகத்தில் பருக்கள் அதிகமாக இருந்தால், அதற்கு இந்த ஃபேஸ் பேக் நல்ல பலனைத் தரும். அதற்கு முட்டையின் வெள்ளைக் கருவை நன்கு அடித்து, அத்துடன் ஒரு ஸ்பூன் கடலை மாவை சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் நீங்கி, முகம் அழகாக இருக்கும்.
கடலை மாவு மற்றும் தயிர் ஃபேஸ் பேக்
உடலில் அதிகமாக சூடு இருந்தால், அதனை சரிசெய்ய இந்த ஃபேஸ் மாஸ்க் சிறந்தது. ஏனெனில் அதில் உள்ள தயிர் வெப்பத்தை தணித்துவிடும். அதிலும் கடலை மாவுடன் கலந்து ஃபேஸ் பேக் செய்தால், சருமத்தில் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது. ஆகவே தயிரை கடலை மாவுடன் கலந்து முகத்தில் தடவி, ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.