Skip to main content

உணவே மருந்து, மருந்தே உணவு

பழங்கால இந்திய மருத்துவங்களும், ஆயுர்வேதமும் நா அறியக்கூடிய சுவைகளை ஆறு வகைகளாகப் பிரிக்கின்றன. ஆயுர்வேதம், உடலின் ஆறு முக்கிய தாதுக்களுடன் இச்சுவைகளைச் சம்பந்தபடுத்தி, உடல் வளர்ச்சியில் இச்சுவைகளின் பங்குகளை விளக்குகின்றது. இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, கார்ப்பு மற்றும் துவர்ப்பு ஆகிய இந்த ஆறுசுவைகளின் பண்புகளையும், உடல் நலத்திற்கு இவற்றின் பங்குகளைப் பற்றியும் சற்று விரிவாய் பார்க்கலாம்.


தொன்றுதொட்டு பழக்கத்தில் இருந்து வரும் இந்திய மருத்துவங்களாகிய ஆயுர்வேதம், சித்த மருத்துவம் போன்றவற்றில் சுவைகள் ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு முக்கிய தாதுக்களைக் கொண்டது என்பதனால் உடலை "யாக்கை" என்று கூறினர். இதில் ஏழாவது தாதுவான மூளை சரிவர இயங்க முதல் ஆறு தாதுக்கள் தகுந்த அளவில் இருத்தல் அவசியம். இந்த ஆறு தாதுக்களும், ஆறு சுவைகளுடன் கீழ்கண்டவாறு சம்பந்தப்பட்டுள்ளன.


துவர்ப்பு - இரத்தத்தைப் பெருக்குகின்றது
இனிப்பு - தசையை வளர்க்கின்றது
புளிப்பு - கொழுப்பினை வழங்குகின்றது
கார்ப்பு - எலும்புகளை வளர்க்கின்றது
கசப்பு - நரம்புகளை பலப்படுத்துகின்றது
உவர்ப்பு - உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது


அந்த கால மருத்துவங்களும், உணவு முறைகளும் இதனை அடிப்படையாகக் கொண்டே இருந்துவந்தது. உடல் தாதுவைப் பெருக்க, சமன் செய்ய அதற்கு ஏற்றவாறு உணவு வகைகளைத் தயாரித்து வந்தனர். இதனைக் கொண்டுதான் "உணவே மருந்து, மருந்தே உணவு" என்று சொல்வார்கள்.


துவர்ப்புச் சுவை (Astringent)

இது அதிகம் விருப்பு, வெறுப்பு காட்டப்படாத சுவை. உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்த சுவை. அதிக வியர்வையைக் கட்டுப்படுத்துகின்றது. இரத்தப்போக்கினைக் குறைக்க வல்லது. வயிற்றுப்போக்கினை சரி செய்யவல்லது.


இது அதிகமாயின், இளமையில் முதுமை தோற்றத்தை உண்டுவிக்கும். வாய் உலர்ந்து போகச் செய்யும், சரளமாக பேசுவதைப் பாதிக்கும். வாத நோய்கள் தோன்ற வழிவகுக்கும்.


கிடைக்கும் உணவுப் பொருட்கள்


வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.


இனிப்புச் சுவை (Sweet)
மனிதர்களால் அதிகம் விரும்பப்படும் சுவை இதுதான். மனதிற்கு மட்டுமல்லாமல் உடலுக்கும் உடனடி உற்சாகத்தைத் தரக்கூடிய சுவையிது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகின்றது.


இது அதிகமாயின் உடல் தளர்வு, சோர்வு, அதிகத் தூக்கம், இருமல், உடல் எடைக் கூடுதல் போன்ற சிக்கல்கள் பலவும் தோன்ற வாய்ப்பு உள்ளது.


கிடைக்கும் உணவுப் பொருட்கள்


பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது.


புளிப்புச் சுவை (Sour)

உணவிற்கு மேலும் ருசி சேர்க்கும் ஒரு சுவையிது. பசியுணர்வைத் தூண்டும். உணர்வு நரம்புகளை வலுப்பெறச் செய்கின்றது. இதயத்திற்கும், செரிமானத்திற்கும் மிகவும் நல்லது.


இது அதிகமாயின், தாக உணர்வினை அதிகரிக்கும். பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், இரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்ற தொந்திரவுகளை உண்டுவிக்கும். உடல் தளரச் செய்யும்.


எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.


காரச் சுவை (Pungent)

பசியுணர்வைத் தோற்றுவிப்பதோடு அல்லாமல், செரிமானத்திற்கும் பெரிதும் உதவுகின்றது. உடல் இளைக்கவும், உடலில் உள்ள அதிக்கப்படியான நீரை வெளியேற்றவும் செய்கின்றது. இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது. தோல் நோய்களுக்கு நல்லதொரு பலனைத் தருகின்றது.


அதிகப்படியான காரம், உடல் எரிச்சலை உண்டுவிக்கும். உடல் சூட்டை அதிகரித்து, வியர்வையை அதிகம் சுரக்கச் செய்யும். குடல் புண்கள் தோன்ற அதிக வாய்ப்பு அளிக்கும்.


வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.


கசப்புச் சுவை (Bitter)
அதிகம் வெறுக்கப்படும் சுவையாக இருந்தாலும், அதிகம் நன்மைப் பயக்கும் சுவையும் இது ஒன்றே. மற்றச் சுவைகளை அறிய இது பெரிதும் உதவுகின்றது. சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தியாக செயல்படுகின்றது. தாக உணர்வைக் கட்டுப்படுத்துகின்றது. உடல் எரிச்சல், அரிப்புகளில் இருந்து நிவாரணம் தருகின்றது. காய்ச்சலைத் தணிக்கின்றது. இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது.


இது அதிகமாயின், உடலின் நீர் குறைந்துப் போகச் செய்யும். மேனி வறண்டு கடினத்தன்மைத் தோன்ற நேரிடும். எலும்புகளைப் பாதிக்கும். அடிக்கடி மயக்கம் உண்டாகும், உச்சகட்டமாய் சுயநினைவற்ற நிலைக்கும் செல்ல வழிவகுக்கும்.


பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவை மிகுதியாய் உள்ளது.


உவர்ப்புச் சுவை (Salt)
தவிர்க்க இயலாத சுவை இது, அளவோடு இருக்கும்பட்சத்தில் அனைவராலும் விரும்பப்படும் ஒன்று. உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது. மற்றச் சுவைகளைச் சமன்செய்ய உதவுகின்றது. உணவுச் செரிமானத்திலும் பங்கு வகிக்கின்றது.


இது அதிகமாயின் தோல் தளர்வினை உண்டுவித்து, சுருங்கிப் போகச் செய்யும். தோல் வியாதிகளையும் தோன்றச் செய்கின்றது.


உடல் சூட்டினை அதிகப்படுத்தி சிறுக் கட்டிகள், பருக்கள் தோன்ற வழிவகுக்கும்.


கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது.

Popular posts from this blog

அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்

கோயில் அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில் கோயில் வகை நட்சத்திர கோயில் மூலவர் சித்திரரத வல்லபபெருமாள்

களாக்காய் சிறப்பான மருத்துவ பயன்

“எப்போதோ கிடைக்கும் பலாக்காயை இப்போது கிடைக்கும் களாக்காய் மேல்” என்று ஒரு பழமொழி உண்டு. அந்தளவிற்கு சிறப்பான மருத்துவ பயன்களை கொண்டது களாக்காய். இந்த தாவரமானது காரைச் செடிபோன்று மலைகளில் தன்னிச்சையாக புதர் போல் வளரும். தோட்டங்களிலும் வளர்க்கப்படும். இது இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது.