கருவுற்ற காலத்தில் உடலுறவு சரியா?

ஒரு பெண் கருவுற்று, வயிற்றுக்குள் குழந்தை வளர்ந்து, பிரசவம் ஆக ஏறக்குறைய 280 நாட்கள் ஆகும். எனவே, இந்தக் கர்ப்பக் காலம் முழுவதுமே உடலுறவில் மிகுந்த எச்சரிக்கை அவசியம். கர்ப்ப
த்தின் ஆரம்ப நாளில் இருந்து மூன்றாம் மாதம் வரையிலான காலகட்டம் மிக மிக முக்கியமானது. அதாவது, கரு உருவாகி 25-ல் இருந்து 30 மணி நேரத்துக்குப் பிறகு கருவில் உள்ள ஒரு செல் பிரிந்து இரண்டு செல்கள் ஆகும்.

சில மணி நேரம் கழித்து இரண்டு நான்காகும், நான்கு எட்டாகும்... இப்படி எண்ணிக்கையில் அதிகரித்துக்கொண்டே போகும். இவை எல்லாமே ஃபெலோபியன் குழாயில்தான் நடக்கும். ஐந்தாம் நாள் கருவானது ஃபெலோபியன் குழாயில் இருந்து நகர்ந்து வந்து, கருப்பையில் வந்து உட்கார்ந்துகொள்ளும். முதல் மூன்று மாதங்களில் தாய்க்கு வாந்தி, குமட்டல் போன்ற மசக்கை அறிகுறிகள் இருக்கும். கர்ப்பம் தரித்த 14-ம் நாளில் இருந்து மூன்றாவது மாதம் வரை தாயின் கருவறையில் உள்ள கருவுக்கு 'எம்பிரியோ’ (Embryo) என்று பெயர். 

மூன்றாவது மாதத்துக்கு அப்புறம் 'ஃபீட்டஸ்’ (Foetus) என்று பெயர். கருவில் உள்ள குழந்தைக்கு முக்கியமான உறுப்புகள் எல்லாம் உருவாகிற தருணம் இது. எனவே, கர்ப்பிணிப் பெண் கூடுதல் கவனமாக இருக்கவேண்டும். மூன்று மாதத்துக்குப் பிறகு கருவைச் சுற்றி 'ஆம்னியான்’ (Amnion) எனப்படும் நீர் நிறைந்த பனிக்குடம் உருவாகும். நடப்பது, உட்கார்வது, படுப்பது எனத் தாயின் உடல் அசைவுகளின்போது கருவில் உள்ள குழந்தை சிதைவுறாமல் இருக்கவே இயற்கை இந்த ஏற்பாட்டைச் செய்கிறது.

எனவே, ஒரு பெண் கர்ப்பம் ஆனது உறுதியானவுடன், அந்தத் தம்பதி தங்களின் செக்ஸ் நடவடிக்கைக்குத் தற்காலிகமாக லீவு கொடுத்துத்தான் ஆக வேண்டும். மாறாக முதல் மூன்று மாதங்களில் உடல் உறவில் ஈடுபட்டால் வயிற்றில் வளரும் கரு ஆரோக்கியமாக உருவாவதில் சிக்கல், பனிக்குடம் உடைதல் போன்ற பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும். மூன்றாவது மாதத்தில் இருந்து ஒன்பதாவது மாதம் வரை உறவில் ஈடுபடலாம்.

முதல் குழந்தை குறைப் பிரசவத்தில் பிறந்திருந்தால், அதற்கு அடுத்த கர்ப்பக் காலத்தில் கட்டாயம் உடல் உறவைத் தவிர்க்க வேண்டும். ஏற்கெனவே கருச்சிதைவு ஏற்பட்டிருத்தல், கர்ப்பக் காலத்தில் பிறப்பு உறுப்பில் ரத்தப்போக்கு, பிரசவத்துக்கு முன்பே கருப்பையின் வாசல் (Cervix) திறந்த நிலையில் இருப்பது, நஞ்சுக்கொடி (Placenta) கருப்பை வாசலுக்கு வந்துவிடுவது போன்ற பிரச்னைகளை எதிர் கொண்டவர்கள் கர்ப்பக் காலத்தில் உடல் உறவில் ஈடுபடக் கூடாது; மேலும் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதும் அவசியம்.

கர்ப்பக் காலத்தின்போது எந்த நிலையில் உடல் உறவு வைத்துக்கொள்ள வேண்டும்?’

இளம் தம்பதியிரிடம் இருந்து மீண்டும் மீண்டும் கேட்கப்படும் கேள்வி இது. கர்ப்பிணிக்கு எந்த நிலை சவுகரியமோ அதுதான் சரியான நிலை. குறிப்பாக கணவனின் எடை மனைவியின் வயிற்றை அழுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஓர் உதாரணம்...  இருவரும் எதிரெதிரே உட்கார்ந்த நிலையில் உறவு கொள்வது. அதேபோல், படுக்கை அறையில் முரட்டுத்தனம் கூடாது. கலவிக்கு முன்னர் இருவருமே பிறப்பு உறுப்புகளைச் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். ஏனெனில், தொற்றுக் கிருமிகள் கர்ப்பிணியையும் சிசுவையும் பாதிக்கும். வாய் வழி (Oral sex)உறவினையும் தவிர்த்தல் வேண்டும்.

அதேபோல, ஏற்கெனவே கருச்சிதைவு ஆனவர்கள், அடிக்கடி ரத்தப்போக்கு இருப்பவர்கள் கர்ப்பக் காலம் முழுவதும் பயணம் மேற்கொள்ளவே கூடாது. மற்றவர்கள் முதல் மூன்று மாதங்களுக்குப் பிறகு ஒன்பதாவது மாதம் வரையிலும் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளலாம்.

தாய் ஆரோக்கியமாக இருந்தால்தான் சேயும் ஆரோக்கியமாக இருக்கும். எனவே, நடைப்பயிற்சி, சுத்தமான காற்று, சத்தான உணவு, நல்ல உறக்கம், மன அமைதி இவை எல்லாமே கர்ப்பிணிப் பெண்ணுக்கு அவசியம். கர்ப்பம் என்று உறுதியானவுடன் அடிக்கடி மகப்பேறு மருத்துவரைக் கலந்தாலோசிப்பது நல்லது. மருத்துவரது பரிந்துரை இல்லாமல் எந்தவித மாத்திரை மருந்துகளும் எடுத்துக்கொள்ளக் கூடாது. கர்ப்பக் காலத்தில் எக்ஸ்ரே எடுக்கக் கூடாது; 

அம்மைப் பாதிப்பு, வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்கள் வராமல் பாதுகாப்பதும் முக்கியம். கர்ப்பக் காலத்தின்போது தீவிர உடற்பயிற்சியினைத் தவிர்த்து கர்ப்பக் காலத்துக்கான பிரத்யேக (Antenatal) உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இது வயிற்றுப் பகுதிக்கு உறுதித்தன்மையைத் தருவதால், பிரசவம் எளிதாகும். ஆனாலும், மருத்துவரது ஆலோசனை இன்றி எந்தப் பயிற்சியையும் செய்யக் கூடாது.
Share on Google Plus

About Vaitheeswara prabu

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.