Saturday, May 31, 2014

பெண்கள் அறிய வேண்டிய பிரசவ அறிகுறிகள்

கர்ப்பிணி பெண்கள் பிரசவத்தின் போது மிகுந்த மன உறுதியுடன் இருக்க வேண்டும். உடலில் ஏதேனும் மாற்றங்கள் காணப்பட்டால் அது குறித்து மருத்துவஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும். 


• கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி துவங்கும்போதோ அல்லது பிரசவத்தின் முதற்கட்டத்திலேயோ, கருப்பைக் கழுத்துப் பகுதியிலிருந்து கோழையானது உடைந்து பிறப்புறுப்பு வழியாக வெளியேறும். இதற்கு `பிரசவத்திற்கு முன்னான கோழைக்கசிவு' என்று பெயர். இது பசைத்தன்மையுடன் இளஞ்சிவப்பு நிறமான சளியாக இருக்கும். பிரசவ வலிக்கு முன்னர் ஏற்படும்
இந்தக் கசிவின்போது, சளியுடன் கலந்து சிறிது ரத்தமும் வெளியேறும். ரத்தப்போக்கு அதிகமாக இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

• பிரசவ வலி ஆரம்பித்தவுடன் குழந்தை மிதந்து கொண்டிருக்கிற பனிக்குடம் உடைந்து விடும். இந்த பனிக்குட நீர் உங்களின் பிறப்புறுப்பு வழியாக தாரை தாரையாக வெளியேறும்.   

• பிரசவத்தில் மொத்தம் இரண்டு நிலைகள் உள்ளன. முதல் நிலையில் கருப்பைக் கழுத்து படிப்படியாக விரிகிறது. அப்போது தசை சுருங்கி விரியும் நிலை தீவிரமாகும். வலி அதிகமாக இருக்கும். ஒவ்வொரு முறை தசைச்சுருக்கம் வரும்போதும் கருவை உந்தி வெளியே தள்ள வேண்டும் என நினைப்பீர்கள். கருப்பைக் கழுத்து முற்றிலுமாகத் திறந்து குழந்தையின் கழுத்து வெளியே தெரியும் வரை முக்கல் கூடாது. கர்ப்பிணிகளுக்கு இந்த நேரத்தில் மன உளைச்சலும், அயர்ச்சியும் அதிகமாக இருக்கும்.   

• இரண்டாவது நிலை 15 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரை கூட நீடிப்பதுண்டு. கருப்பை தசைச்சுருக்கம் அதிகரிக்கும். கருப்பை வாய் போதுமான அளவு அகலமாகத் திறந்தவுடன், தசைச்சுருக்கங்கள் தங்கள் இயல்பு நிலையை மாற்றிக்கொண்டு அதிவேகத்தோடு இயங்கும். ஒவ்வொரு சுருக்கத்திற்குப் பிறகும் கருப்பையின் தசைநார்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறுகத் தொடங்கும். இதனால் குழந்தை யோனிக்குள் தள்ளப்படுகிறது. 

யோனித்திறப்பில் குழந்தையின் தலை அரைப்பாகம் தெரிய ஆரம்பித்த உடனேயே வாயால் காற்றை உள்ளிழுத்து வேகமாக, அதேசமயம் நேர்த்தியாக முக்க வேண்டும். இல்லையென்றால் தசைகளும், திசுக்களும் கிழிந்து போக வாய்ப்பு ஏற்படும். தலை வெளியே வந்ததும், அடுத்தடுத்த முக்குதல்கள் மூலம் எஞ்சியுள்ள உடற்பகுதிகள் சுலபமாக வெளியே வந்துவிடும். 

மேற்சொன்ன மாற்றங்கள் நிகழும் போதே மருத்துவமனைக்கு சென்றுவிடுவது நல்லது.