Thursday, May 15, 2014

நவக்கிரக தோஷங்களை நீக்கும் பசுபதீஸ்வரர்

தென்னாடுடைய சிவன், எந்நாட்டவருக்கும் இறைவனான சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக தானாகவே லிங்க வடிவில் தோன்றிய திருத்தலங்கள் பல உள்ளன. அவற்றுள் யுகங்களை கடந்த பெருமையுடையது பந்தணைநல்லூர் பசுபதீஸ்வரசுவாமி கோவிலாகும்.

பாடல்பெற்ற தலம்

திருஞானசம்பந்தர், திருநாவுக் கரசர் ஆகியோரால் பாடல் பெற்ற தலம். இத்தலம் பசுபதி, பந்தணைநல்லூர், பசுபதியார் என்று திருமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டத்தில் கும்பகோணத்தில் இருந்து சுமார் 27 கிலோ மீட்டர் தொலைவில் இத்தலம் உள்ளது. கிழக்கு நோக்கி உள்ள இந்த கோவிலில் மூலவர் பசுபதீஸ்வரர் சுயம்பு லிங்கமாகவும், வடக்கு நோக்கிய சன்னதியில் அம்பிகை காம்பனைய தோளியாக அருள்பாலித்து வருகிறார்.

அம்பாளை வடமொழியில் வேணுபுஜாம்பிகை என்பர். அம்பாள் சன்னதியின் மேற்புறம் பத்ரகாளி சன்னதி உள்ளது. பத்ரகாளி 8 கைகளுடன் இரண்டு கால்களிலும் 2 அசுரர்களை மிதித்தவாறு காட்சி அளிக்கிறாள். கீழ்ப்புறம் கோபுர வாசலில் ஐயனார், முனீஸ்வரர் ஆகியோர் அம்பிகை தவக்கோலத்திற்கு காவல்புரிகின்றனர்.

தலவரலாறு

பரம்பொருளான பரமேஸ்வரன் திருவிளையாடல்கள் செய்வதில் ஆர்வம் மிக்கவர். கயிலையில் சிவபெருமானிடம் பார்வதிதேவி தான் பந்து விளையாட வேண்டும் என கூறினார். உடனே இறைவன் நான்கு வேதங்களையும், நான்கு பந்தாக மாற்றித்தருகிறார். அந்த பந்தைக் கொண்டு பராசக்தி தன் தோழியருடன் பந்தாடலில் ஈடுபட்டு இன்புறுகிறாள். இறைவி பந்து விளையாட ஏதுவாக சூரியன் மாலை நேரம் வந்தும் மறையாமல் இருக்கிறார். அதனால் பகற்பொழுது நீண்டு கொண்டே போனது. இதனால் உலக வாழ்க்கை தடைப்பட்டது.

உயிர்கள் துன்பத்திற்கு ஆளாகின. இதை முறையிட சென்ற நாரதரையும், இறைவனையும் விளையாட்டு ஆர்வத்தில் இருந்த இறைவி கவனிக்கவில்லை. கோபம் அடைந்த சிவபெருமான், அம்பிகை விளையாடிய பந்தை உதைத்தார். அந்த பந்து பூமியில் வந்து விழுந்தது. தவறை உணர்ந்து மனம் வருந்திய பராசக்தி, இறைவனிடம் சென்று மன்னிப்பு கேட்டாள். பசுவாக பூமியில் பிறக்கும் படி சிவபெருமான் பார்வதியை சபித்து விடுகிறார். இதனால் பூமியில் பந்து விழுந்த கொன்றைக்காட்டில் பார்வதிதேவி பசுவாக மாறினாள். சாபவிமோசனம் பெற சரக்கொன்றை மரத்தின் கீழ் இருக்கும் சிவலிங்கத்தில் பால் சொரிந்து வழிபட்டார்.

தங்கைக்கு உதவியாக திருமால் கன்வமகரிஷி ஆசிரமத்தில் தங்குகிறார். அங்கு அம்பிகை பசுவாகவும், திருமால் இடையனாகவும் இருந்து வந்தனர். கன்வமகரிஷி பூஜைக்கு பால் குறைந்து போயிற்று. சுயம்புலிங்கத்தின் மீது நாள்தோறும் பாலை சொரிந்து வந்ததை கண்ட திருமால் பசுவினை அடித்தார். பசு துள்ளிகுதித்து புற்றினை மிதித்தது. அப்போது அதிசயமாக அங்கு இருந்த லிங்கம் வெளிப்பட்டது. அன்னை பசு உருவம் நீங்கி, தன் உருவம் கொண்டாள். இடையன் ஆதிகேசவன் பெருமாளாக உருவெடுத்தார் என தலவரலாறு கூறுகிறது.

தமிழகத்தில் வரலாற்று சிறப்பு மிக்க வடக்கு நோக்கிய அம்பிகை சன்னதி அனைவராலும் போற்றப்படுகிறது. இந்த அம்பிகையை வேய்த்தோளி என்னும் பெருமாட்டி என்று திருநாவுக்கரசர் குறிப்பிடுகிறார். அன்னை வேணுபுஜாம்பிகை வழக்கத்திற்கு மாறாக வலது திருக்கரத்தில் சக்கரத்தையும், இடது திருக்கரத்தில் கமண்டலத்தையும் ஏந்தி காட்சி அளிப்பதால் ஞானத்தை தருபவளாக, சகல தோஷத்தையும் நீக்கும் ஆற்றல்மிக்க அன்னையாக விளங்குகிறாள்.

ஆதிகேசவ பெருமாள், கண்ணுவ முனிவர் மற்றும் பிற தேவர்கள் வேண்டி கொண்ட படி இறைவனும், இறைவியும் திருமணக்கோலத்தில் கல்யாண சுந்தரராக காட்சி அளிக் கிறார்கள். இங்கு நவக்கிரகங்கள் நேர் வரிசையில் உள்ளன. இறைவனின் திருமணத்தை கண்டு வழிபட்ட ஆனந்தக்களிப்புடன் நேர்வரிசையில் நிற்கும் இவர்களை வழிபடுபவர்களுக்கு பசுபதீஸ்வரர் அருளால் கோள்களால் வரும் துயரம் இல்லை. குடும்ப ஒற்றுமை, சொத்து வழக்கு, கட்டிடம், மனை, நிலம் போன்றவற்றால் ஏற்படும் பிரச்சினைகள் திருமணத்தடைகள், நவக்கிரக தோஷங்கள், கண் நோய், கண் குறைபாடு நீக்குதல் போன்ற அன்றாட மனிதர்களின் குறைபாடுகளை நீக்கும் வல்லமை பெற்றவராக விளங்குகிறார்.



அதிசய காட்சி

ஆதிகேசவ பெருமாள், பரிமளவல்லி தாயாருக்கு என தனி சன்னதிகள் உள்ளன. இந்த கோவிலில் உள்ள முருகனை பற்றி அருணகிரிநாதர் பாடியுள்ளார். வள்ளி, தெய்வானையுடன் அழகிய மயில் மீது இளமை கொஞ்சும் திருக்கோலத்துடன் முருகன் காட்சி அளிக்கிறார். ஆவணி மாதம் 19, 20, 21 ஆகிய நாட்களில் சூரிய கதிர்கள் காலைப்பொழுதில் பசுபதீஸ்வரர் திருமேனியின் மீது விழும் அதிசய காட்சியை இன்றும் தரிசிக்கலாம்.

திருமண வரம் தரும் பசுபதீஸ்வரர்

பந்தணைநல்லூர் பசுபதீஸ்வரசுவாமி கோவிலில் பசுபதீஸ்வரர் திருமணக்கோலத்தில் கல்யாண சுந்தரராக தேவியுடன் அழகு திருக்கோலத்தில் காட்சி அளிக்கின்றார். அமாவாசை நாட்களில் இறைவனை அபிஷேக, ஆராதனை செய்து, வில்வ இலையால் அர்ச்சனை செய்து 11 முறை வலம் வந்து பிரார்த்தனை செய்தால் திருமண தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடக்கும் என தலபுராணம் கூறுகிறது.

மாசி மக திருவிழாவில் 7–ம் நாள் நடைபெறும் திருக்கல்யாண நிகழ்ச்சியில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் தாலிக்கயிறு, மஞ்சள், குங்குமம் ஆகியவையே திருமணம் நடந்ததற்கு சாட்சியாக விளங்குகின்றன.

டாக்டர் நா.மோகன்தாஸ், தஞ்சாவூர்.

பித்ரு தோஷ நிவர்த்தி தலம்

பந்தணை நல்லூர் பசுபதீஸ்வரர் திருத்தல இறைவன் கண்ணொளி வழங்கியும், நோய் தீர்க்கும் மருத்துவராகவும் இருப்பதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. இறைவனுக்கு திங்கட்கிழமையன்று அபிஷேக, ஆராதனை செய்து 5 அன்னங்கள் படைத்து, புரசு இலையில் வைத்து அன்னதானம் செய்தால் பித்ருக்களால் ஏற்படும் சாபம் நீங்கி அவர்கள் அருளாசியுடன் அனைத்து நலன்களும் கிடைக்கும் என்று தலபுராணம் கூறுகிறது.



வெளிநாடு செல்ல அருள்புரியும் முனீஸ்வரர்

பந்தணை நல்லூர் பசுபதீஸ்வரர் கோவில் கோபுரவாசல் சுவரில் முனீஸ்வரர் உருவம் அழகுற வரையப்பட்டுள்ளது. அதன் முன் விளக்கு ஏற்றப்பட்டுள்ளது. முனீஸ்வரர் அருவ நிலையில் ஜோதியாக காட்சி அளித்து பில்லி, சூனியம், ஏவல், மனக்கோளாறுகளை அகற்றி அனைவருக்கும் பாதுகாவலராக இருப்பதாக ஐதீகம்.

மேலும் இந்த முனீஸ்வரர் வெளிநாட்டில் வேலை கிடைக்கவும், குழந்தை பேற்றினை வழங்கவும் அருள்புரிவதாக தலபுராணம் கூறுகிறது.

வாரந்தோறும் ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இங்கு வழங்கும் முடிக்கயிறு மற்றும் எலுமிச்சை பழம் மந்திர சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.