Tuesday, March 29, 2016

உணவில் கேழ்வரகை அடிக்கடி சேர்ப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்!!!

தானியங்களில் ஒன்று தான் ராகி என்னும் கேழ்வரகு. அக்காலத்தில் மக்கள் பெரும்பாலும் காலை வேளையில் கேழ்வரகை கூழ் செய்து காலை உணவாக உட்கொண்டு வந்தார்கள். அதனால் தான் அவர்கள் நீண்ட நாட்கள் நோயின்றி ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார்கள்.


கேழ்வரகு மட்டுமின்றி, கம்பு, மக்காசோளம், கோதுமை போன்றவற்றை தங்களின் உணவுகளில் அதிகம் சேர்த்து வந்தார்கள். ஆனால் மற்றவையோடு ஒப்பிடுகையில் கேழ்வரகில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.







கேழ்வரகை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் கிடைக்கும் நன்மைகள் 


எடையை குறைக்கும்

 கேழ்வரகில் மிகவும் ஸ்பெஷலான ட்ரிப்டோபேன் என்னும் பசியைக் கட்டுப்படுத்தும் அமினோ ஆசிட் உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து வளமாக இருப்பதால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும். இதன் மூலம் கண்ட உணவுகளின் மீது நாட்டம் அதிகரித்து, அதை வாங்கி உட்கொள்ளும் பழக்கம் குறைந்து, உடல் எடை குறைய வழிவகுக்கும்.

கொலஸ்ட்ராலைக் குறைக்கும்

 ராகி இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, ப்ளேக் உருவாவதைத் குறைப்பதோடு, இரத்த நாளங்களில் அடைப்புகள் ஏற்படுவதைத் தடுத்து, அதன் மூலம் பக்க வாதம் மற்றும் இதர இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கும். இதற்கு கேழ்வரகில் உள்ள லெசித்தின் மற்றும் மெத்தியோனைன் என்னும் அமினோ அமிலங்கள் தான் காரணம். இந்த அமினோ அமிலங்கள் கல்லீரலில் உள்ள கொழுப்புக்களை உடைத்து எளிதில் வெளியேற்றிவிடும்.

நீரிழிவு 

கேழ்வரகை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால், அதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து மற்றும் பாலிஃபீனால்கள் நீரிழிவு வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கும். ராகில் உள்ள நார்ச்சத்து இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையின் அளவைக் குறைத்து, சீராக பராமரிக்கும்.

எலும்புகளுக்கு நல்லது 

வளரும் குழந்தைகளுக்கு கேழ்வரகு கூழ் கொடுப்பது மிகவும் நல்லது. இதற்கு அதில் உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் டி தான் காரணம். இச்சத்துக்களால், எலும்புகள் வலிமையடைவதோடு, அதன் வளர்ச்சியும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் இளம் தலைமுறையினரும் கேழ்வரகு கூழ் குடித்தால், எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் இருக்கும்.

இரத்த சோகை

 ராகியில் இரும்புச்சத்து வளமாக இருக்கிறது. இதனால் உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை வருவது தடுக்கப்படும். மேலும் இதில் வைட்டமின் சி இருப்பதால், எளிதில் உடலானது இரும்புச்சத்தை உறிஞ்சும்.

பற்களை வலிமையாக்கும் 

பற்கள் வலிமையிழந்து மஞ்சளாகவோ அல்லது வாய் துர்நாற்றமோ இருந்தால், வாரம் ஒருமுறை ராகி கூழ் குடித்து வாருங்கள். இதனால் அதில் உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் டி பற்களை வலிமையாக்கும். மேலும் வாய் துர்நாற்றம் வீசுவதும் நீங்கும்.

செரிமானத்திற்கு உதவும் 

கேழ்வரகில் உள்ள அளவுக்கு அதிகமான நார்ச்சத்தால், செரிமானம் மற்றும் குடலியக்கம் சீராக நடைபெறுவதோடு, மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படும். அதிலும் இதில் கரையக்கூடிய நார்ச்சத்து வளமாக இருப்பதால், குடலில் எவ்வித இடையூறுமின்றி உணவுகளான செல்ல வழிவகுத்து, எளிதில் கழிவுகளை வெளியேற்றும். எனவே முடிந்தால் தினமும் ஒரு டம்ளர் ராகி கூழ் குடியுங்கள்.