Thursday, May 15, 2014

உள்ளங்கையை பராமரிக்க

ஆண்களின் கைகளைவிட, பெண்களின் கைகளுக்கு உழைப்பு அதிகம். பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, கரண்டி பிடித்துக் கிண்டுவது,
பொரிப்பது, வதக்குவது சமைப்பது என, நம் கைகள் ஆல் டைம் ஆன் டியூட்டி
தான்.

ரேகைகள் தேய வைக்கும் இந்த வேலைகளால் `பட்டுப் போன்ற கைகள்' ஒரு
கட்டத்தில் பரிதாபமாக மாறலாம். சிலருக்கு வெடிப்பு, வறட்சி, அரிப்பு, கோடுகள், தோலுரிவது போன்றவை ஏற்படலாம். வேறு சிலருக்கு, நகம் உடைந்து போவது, நிறம் மாறவது, புள்ளிகள் தோன்றுவது என நகத்திலும் பாதிப்புகள் வரலாம்.

`அதுக்காக வேலை பார்க்காமல் இருக்க முடியுமா...? என்றால், முடியாது தான். ஆனால், உங்களின் உணவு முறையிலும், கைகளை பராமரிப்பதிலும் சற்று கவனம் செலுத்தினால்... உங்கள் உள்ளங்கையில் தங்குமே மென்மை!

* உள்ளங்கையில் போதிய ஈரப்பதம் இல்லாமல் போனால் சிலருக்கு வெடிப்புகள் தோன்றி, கறுப்பாக மாறிவிடும். அவர்கள் அடிக்கடி கைகளில் வேசலின் தடவிக் கொள்ளலாம்.

* ஓர் உருளைக்கிழங்கை வேகவைத்து, அதில் நான்று (அ) ஐந்து சொட்டு ஆலிவ் எண்ணெயைக் கலந்து அரைத்துக் கொள்ளுங்கள். இதைக் கைகளுக்குப் பூசி, தேய்த்துக் கழுவுங்கள். ஆலிவ் எண்ணெய், தோலுக்கு நல்ல ஈரப்பத்தைக் கொடுக்கும். உருளை, கருமையை நீக்கிவிடும். வெடிப்புகள் தொடராமல் இருக்க... நிறைய தண்ணீர், பால், ஆரஞ்சு, ஆப்பிள் ஜுஸ் குடியுங்கள். காய்ச்சிய, வெது வெதுப்பான பாலில் விரல்களை அமிழ்த்தி ஊறவிடலாம்.

* வைட்டமின் - சி குறைபாட்டால் சிலருக்கு கைகளில் தோல் உரியலாம். டிடெர்ஜென்ட் பவுடர், சோப் போன்றவற்றாலும் அலர்ஜி ஏற்பட்டு தோல் உரியலாம். இரண்டு டீஸ்பூன் ஓட்ஸ் பவுடருடன் தயிர் கலந்து கை, உள்ளங்கை, விரல் இடுக்கில் பூசி, மிதமான வெந்நீரில் தேய்த்துக் கழுவுவதுடன், மறக்காமல் நெல்லிக்காய் ஜுஸ் குடியுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.
* நகத்தின் நிறம், சிலருக்கு திடீரென பழுப்பு நிறத்தில் மாறலாம். இரும்புச்சத்து குறைபாடு தான் இதற்குக் காரணம். பச்சை காய்கறிகள், கீரை வகைகள், பால் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். காய்ச்சிய, வெது வெதுப்பான பாலில் விரல்களை அமிழ்த்தி ஊறவிடலாம்.

* அதீத வெயிலோ, கடும் குளிரோ சட்டென நம்மை பாதிக்கும் போது, விரல் நகம் உடையலாம். பாதாம் பாலை விரல் நகங்களில் தடவி, அரை மணி நேரம் கழித்து கழுவுங்கள். நகம் வலுடையும்.

* நகங்களில் திடீரென வெள்ளைப் புள்ளிகள் தோன்றும். நம்மையும் அறியாமலேயே நகங்களில் விழும் சின்ன அடி அல்லது பலமான அழுத்தம் காரணமாக ரத்த ஓட்டம் குறைவாகி இப்படி வெண் புள்ளிகள் வரலாம். நகத்தில் வெண்ணெய் அல்லது தயிர் தடவி வந்தால், ஓரிரு நாட்களிலேயே புள்ளிகள் மறைந்து விடும்.

* உள்ளங்கை மற்றும் கையின் மேல் பகுதியில் தேங்காய் எண்ணெய் தடவி, தினமும் ஐந்து நிமிடங்கள் கைகளை மூடி மூடித் திறந்தால், தோலின் சுருக்கங்கள் நீங்கி தசைகள் விரியும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஓர் எலுமிச்சம் பழத்தை உள்ளங்கையில் வைத்து உருட்டிக் கொண்டே இருங்கள். பஞ்சுபோல் உள்ளங்கை மிருதுவாக இருக்கும்.