Saturday, June 28, 2014

கருமையான கூந்தல் வேண்டுமா

ரொம்ப அனீமிக் ஆக இருக்கீங்க. தினமும் பேரீச்சம் பழம் சாப்பிடுங்க. சீக்கிரமே குணமாயிடும். - இப்படி டாக்டர்களால் பரிந்துரை செய்யப்படும் 
பேரீச்சம்பழத்தின் பலன்கள், உள் உறுப்புகளுக்கு மட்டுமல்ல.... வெளி சருமத்துக்கும் ஏற்றதுதான்! ஆம்.. அழகு பலன்களிலும் பலே போட வைக்கும்
இந்தப் பேரீச்சம் பழத்தின் பெருமைகளைப்
பார்ப்போம்.

அதிக அலைச்சலால் சிலருக்கு முகத்தில் அதிகம் அழுக்குப் படியும். அதோடு முகம் கருத்து, தொய்வடைந்தும் போகும். இதற்கு பேரீச்சை பிரமாதமான நிவாரணி. இரண்டு பேரீச்சம் பழத்தைத் தண்ணீரில் ஊற வைத்து அரைத்து எடுங்கள்.

இந்த விழுதுடன், ஒரு டீஸ்பூன் வெண்ணை கலந்து, முகத்தில் கீழிருந்து மேல் நோக்கித் தடவுங்கள். வாரம் இரண்டு அல்லது மூன்று முறை இப்படிச் செய்தால், பேஷியல் செய்தது போல் பிரகாசமாகும் முகம். மஞ்சள் காமாலை, வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்கள் படுத்தி எடுத்ததால் சிலருக்கு முகம் பொலிவிழந்து காணப்படும். 

அந்த வாட்டத்தைப் போக்கி முகத்தைப் பளிச்சிடச் செய்கிறது பேரீச்சை! பேரீச்சம் பழம்-3, வெள்ளரிக்காய் ஜுஸ்- அரை கப், கேரட் ஜுஸ், புதினாச் சாறு, எலுமிச்சைச் சாறு- தலா 2 டீஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். இவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை முகத்தில் பூசி, சிறிது நேரம் மசாஜ் செய்து விட்டுக் கழுவுங்கள். 

இவ்வாறு தினமும் செய்தால், முகம் முன்பைக் காட்டிலும் பளபளப்பாக இருக்கும். நாற்பது வயதுக்கு மேல் சிலருக்கு முகம் வெளிறி, கண்களைச் சுற்றி கருவளையும் விழுந்து, முகமெல்லாம் கறுப்புத் திட்டுகள் காணப்படும். 

இதைப் போக்கும் சிறந்த சிகிச்சை இது. பேரீச்சம் பழங்களை முந்தின நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் அந்தத் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் முல்தானிமெட்டி பவுடரை கலந்து முகத்தில் பூசுங்கள். பொலிவு கூடி இளமை இதோ இதோ என்று உங்கள் கண்ணாடி பாடும். வாய் நாற்றம் சாதாரண விஷயம்தான்.  

2 பேரீச்சம் பழத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வையுங்கள். இந்த தண்ணீரால் வாய் கொப்பளிக்க, பற்கள் பளபளவென மின்னுவதுடன், சுவாசப் புத்துணர்வும் கிடைக்கும். பேரீச்சம் பழத்தை ஊற வைத்த தண்ணீருடன் ஒரு டீஸ்பூன் விளக்கெண்ணை கலந்து புருவம், இமைகளில் தடவி வர, முடி அடர்த்தியாகும். 

கண்களும் பொலிவு பெறும். கேசப் பராமரிப்பு இல்லாமல் அழகுக் குறிப்பு முழுமை பெறாதே! கருகரு கேசத்துக்கும் வழி சொல்கிறது பேரீச்சம் பழ தைலம். 100 கிராம் உயர்ரக பேரீச்சம் பழத்தை எடுங்கள். இதைத் கொட்டையுடன் தட்டி, மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் ஊற்றி, பத்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்குங்கள். 

ஒருநாள் இதை அப்படியே விடுங்கள், ஊறிய பேரீச்சம் பழத்தை அரைத்து வடிகட்டுங்கள். இதனுடன் சம அளவு தேங்காய் எண்ணையைக் கலந்து காய்ச்சுங்கள். இந்த எண்ணை பல பிரச்சினைகளுக்கான ஒரே மருந்து. ஒருநாள் விட்டு ஒருநாள் இந்த எண்ணையை சில சொட்டுகள் தலையில் தேய்த்து மசாஜ் செய்துவர, கேசத்தின் செம்பட்டை நிறம் மாறி, கருமையாக வளரத் தொடங்கும். 

இந்த எண்ணையுடன் சம அளவு அரைத்த நெல்லிக்காய் விழுதையும் சேர்த்துக் காய்ச்சி, தலையில் தடவினால், பொடுகுத் தொல்லை நீங்கும். முடி உதிர்வது நின்று வளரத் துவங்கும். இந்த எண்ணை பிரமாதமான கண்டிஷனரும் கூட. இதைத் தேய்த்து மசாஜ் செய்த பின் கற்றாழை ஜெல்லால் பேக் போட்டு, சீயக்காய் தேய்த்துக் குளித்து வர, கூந்தல் பட்டுப் போல மென்மையாகும்.