Thursday, May 15, 2014

பிணி தீர்க்கும் மகா மாரியம்மன் திருக்கோயில்

வலங்கையின் மையப்பகுதியில் வலங்கைமானில் அருள்மிகு ஸ்ரீ வேம்படி
சீதளாதேவி மகா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. முதலில் வேப்ப மரத்தடியில் சுயம்பு உருவமாய் தோன்றி பின் சிலாரூபமாகப் பரிணமித்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள்!

சீதளாதேவி - பெயர்க்காரணம்: சீதளம் என்றால் குளிர்ச்சி மற்றும் தாமரை என்ற இரு பொருளினைக் கூறலாம். இவ்விரண்டுமே நம் அன்னைக்குப் பொருந்தும். கொடிய நோயான அம்மையை விரட்டக்கூடிய மருந்தான வேப்பிலை உடல் உஷ்ணத்தைப் போக்கி, உடலுக்குக் குளிர்ச்சியூட்டி நோய் எதிர்ப்புச் சக்தியினைத் தருகிறது. இவ்வேப்பிலை சக்தியின் அம்சமாகவும் கருதப்பட்டு வருவதால் சீதளாதேவிக்கு இப்பெயர்க் காரணம் பொருந்தும்.

ஆலய அமைப்பு: திருக்கோயிலின் அமைப்பு நீள் செவ்வக வடிவில் அமைந்துள்ளது. கருவறையில் மூலவராய் சீதளாதேவி அம்மன் கற்சிற்பமாய் வீற்றிருக்கிறாள். அதனையடுத்த அர்த்த மண்டபத்தில் உற்சவர் சிலை காணப்படுகிறது. கருவறையின் நேரெதிரே பலிபீடம் மற்றும் சூலமும் அமைக்கப்பட்டு உள்ளது. வாயிற்காப்போராக துவாரபாலகிகள் இருபுறமும் உள்ளனர்.

மேலும், மகாமண்டபத்தில் பரிவாரத் தெய்வங்களாக ஸ்ரீ காமாட்சியம்மன், ஸ்ரீ காத்தவராயன், ஸ்ரீ பேச்சியம்மன், ஸ்ரீ வீரன் ஆகிய சிறு தெய்வங்கள் இடப்புறத்தே சுவரை ஒட்டிய நிலையில் வடக்கிலிருந்து தென்திசை பார்த்தவாறு அமைந்து அருள்பாலிக்கின்றனர்.

ஆலய திருவிழாக்கள்: சீதளாதேவி அம்மனுக்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் இரண்டாவது வாரம் வெள்ளிக்கிழமையன்று பூச்சொரிதல் வைபவத்துடன் திருவிழா தொடங்குகிறது.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாள் ஞாயிற்றுக்கிழமையன்று அம்மனுக்கு முதல் காப்பு கட்டப்படும். இரண்டாவது காப்பு அதற்கடுத்த ஞாயிறு அன்று கட்டப்படும்.

மூன்றாவது ஞாயிறு அம்மனுக்கு திருவிழா நிகழ்த்தப்பெறும். திருவிழாவில் பக்தர்களும், மெய்யன்பர்களும் தத்தமது வேண்டுதல்களை நிறைவேற்றும் பொருட்டு பால் காவடி, புஷ்பக் காவடி, சிலவுக்காவடி, அலகுக்காவடி, ரதக்காவடி இவற்றுடன் பாடைக்காவடியும், சிறிய குழந்தைகளுக்கான நேர்த்திக் கடனாக தொட்டில் காவடியும் பக்தர்களால் மேற்கொள்ளப்பட்டு, ஆலயத்தை மும்முறை வலம் வந்து அம்மனை வணங்கி காவடியினை இறக்கி வைப்பர். அன்றைய தினம், வைகறை முதலே அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கின்ற சூழலில் அன்னை சீதளாதேவியினை எண்ணி மனமுருகி நோயால் பாதிக்கப்பட்டவரோ அல்லது அவரை சார்ந்தவரோ வேண்டினால், அன்னையின் அருட்கடாட்சம் பெற்று நோய் நீங்கி நலம் பெறுவர் என்பது நிதர்சனமாகும்.

இவ்வாறு உயிருக்கு ஆபத்தான சூழலை அன்னையின் அருளால் கடந்தவர்கள் நேர்த்திக் கடனாக பாடைக்காவடி எடுத்து தனது வேண்டுதலை நிறைவேற்றுவர். நேர்த்திக் கடன் செலுத்துபவர் சிறிய வயதினராக இருந்தால் மூங்கில் ஒன்றில் தொட்டில் கட்டி அதில் குழந்தையினை படுக்க வைத்து ஆலயத்தை சுற்றி சுமந்து வந்து வேண்டுதலை முடிப்பர்.

திருவிழாவன்று மாலை செடில் உற்சவம் வெகு விமரிசையாக வாண வேடிக்கையுடன் நிகழ்த்தப்பெறும். சீதளாதேவியானவள், செடில் உற்சவம் காணும் பொருட்டு உற்சவ மூர்த்தியாய் வீதியுலாப் புறப்பட்டு பின் ஆலயத்தை வந்தடைந்து கோவிலின் முகப்பே நின்று செடில் சுற்றப்படுவதை கண்டு களிப்பாள்!

பல்லக்குத் திருவிழா: பங்குனி மாதம் இரண்டாம் ஞாயிறு புஷ்ப பல்லக்கு திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும் அன்று காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நேத்திக்கடன் மற்றும் வேண்டுதல்கள் நிகழ்த்தப் பெறும்.

பல்லக்கு திருவிழாவன்று இரவு நறுமணம் மிகுந்த அனைத்து விதமான பூக்களால் செய்யப்பட்ட பல்லக்கு ஆலயத்தில் தயாராக காணப்படும். அப்பல்லக்கில் அம்மன் உற்சவ மூர்த்தியாய் எழுந்தருளி நகர் உலா வலம் வருவாள்.

நவராத்திரி உற்சவம்: ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் வரக்கூடிய நவராத்திரி விழாவன்று 9 நாட்களும், சீதளாதேவியானவள் துர்காதேவி, மகிஷாசூரமர்த்தினி, லட்சுமி தேவி, சரஸ்வதி தேவி, காமாட்சி அம்மன், கஜலட்சுமி, தான்ய லட்சுமி, லலிதாம்பிகை, வாராஹி, விஜயலட்சுமி (விஜயதசமியன்று) முதலிய சிறப்புத் திருக்கோலங்களில் ஆலயத்திலேயே சிறப்பு அலங்காரத் தோற்றத்துடன் அழகுற அருள்பாலிக்கிறாள்.

சிறப்பு பரிகாரங்கள்: கடன் தொல்லை, குழந்தைப்பேறு, திருமண வரம் கிடைக்க, குடும்ப பிரச்னைகள், கணவன்-மனைவி பிரிவு போன்ற சகல பிரச்னைகளுக்கும் வேண்டுதல்கள் வைக்கப்பட்டு நேர்த்திக்கடன்களும், பரிகாரங்களும் இத்தலத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.

பரிகாரங்கள்: திருமணம் வரம் கிட்ட 5 வெள்ளிக்கிழமைகளில் இராகு கால நேரத்தில் (10.30-12.00) எலுமிச்சைப் பழத்தில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி அம்மனை மனமுருகி வேண்டி வந்தால் கன்னிப் பெண்களுக்கு மணம் விரும்பும் மணமகனும், மாங்கல்யமும் அமையும்.

குழந்தை வரம் பெற: 5 ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை நேரத்தில் (4.30 -6.00) மணியளவில் 7 எலுமிச்சைப் பழம் கொண்டு நல்லெண்ணெய்தீபம் ஏற்றி வந்தால் குழந்தைப்பேறு அமையும்.

கடன் தொல்லை தீர: 3 எலுமிச்சம் பழத்தினை அம்மனின் காலடியில் வைத்து பூஜித்து அம்மனுடைய 108 நாமங்களை அர்ச்சனை செய்தால் தீராத கடன்கள் நீங்கி, சகல நன்மைகளும் அம்மன் அருளால் கிடைக்கப் பெறும் என்பது ஐதீகமாகும்.

  

நடை திறந்திருக்கும் நேரம்: காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை. மாலை 4 மணி முதல் 8 மணி வரை.

ஆலயம் செல்லும் வழி: குடந்தை - மன்னார்குடி செல்லக்கூடிய பேருந்து வழித்தடத்தில் முதல் 10 கி.மீ. தொலைவில் வலங்கைமான் உள்ளது. இவ்வூரில் பேருந்து நிறுத்தத்திற்கு அருகாமையிலே ஆலயம் அமைந்துள்ளது. குடவாசல் மற்றும் பாபநாசம் வழியாகவும் வலங்கைமான் வருவதற்கு பேருந்து வசதி உள்ளது. இம்மார்க்கத்தில் வரும் பக்தர்கள் கோயில் வாசலிலேயே இறங்கலாம். திருவிழா காலத்தில் குடந்தையிலிருந்து சிறப்புப் பேருந்து வசதியும் உண்டு.

தகவல்களுக்கு: 99429 46094